ஜாராவும் அவரின் குடும்பமும் போர் மேகம் சூழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்த அகதிகள். பாத்திமா மற்றும் பிஸ்மில்லாவின் மூத்த மகளான ஜாராவுக்கு இரண்டு தங்கைகளும் இருந்தன.
அகதிகளாக மலேசியாவில் வசித்து வந்த அவர்களுக்கு, சட்டரீதியாக பணியாற்றுவதற்கு அங்கு அனுமதியில்லை. அந்த வாழ்சூழ்நிலையிலிருக்குது தப்பிக்க ஆட்கடத்தல்காரர்கள் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்ட ஜாராவின் குடும்பம், பயணத்திற்கு அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
ஆனால், படகு வழியாக வெளியேறுவதற்கு முந்தையா நாள் இரவு ஆஸ்திரேலியா செல்லும் திட்டம் இப்போதைக்கு வேண்டாம் என்கிறார் ஜாராவின் தந்தை. தந்தையின் பதிலால் குடும்பத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தாலும், அப்பயணத்தை அவர்கள் மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து, அடுத்த சில தினங்களில் இந்தோனேசிய பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற படகு கடலில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அக்டோபர் 2009 நடந்த இவ்விபத்தில் 107 அகதிகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதில் ஜாராவின் நெருங்கிய நண்பர்களும் அடங்குவர். அதன் பிறகு, படகு வழியாக ஆஸ்திரேலியா செல்லும் முயற்சியினை மொத்தமாக கைவிட்டிருக்கின்றது ஜாராவின் குடும்பம்.
இந்த நிலையில், துயரம் மிகுந்த ஜாராவின் காலங்களை அச்சத்திற்கு அப்பாலான பயணம் என்ற ஆவணப்படமாக தற்போது வெளியாகியுள்ளது.
இதில், ஏழு ஆண்டுகளாக மலேசியாவில் காத்திருந்து சட்டரீதியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைந்த ஜாராவின் சூழலையும் அவரது குடும்ப நிலையையும் இப்படம் பதிவு செய்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் திரும்பும் கனவைக் கொண்டிருக்கின்ற ஜாரா, அங்கு தாய்-தந்தை இழந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்க விருப்பம் கொண்டிருக்கிறார்.
2009 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்வது தொடர் நிகழ்வுகளாக இருந்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தொடங்கியது.
ஆஸ்திரேலிய அரசு. அந்த வகையில், 2013க்கு பின்னர் 30க்கும் மேற்பட்ட படகுகளில் வர முயற்சித்த 800க்கும் அதிகமான அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது ஆஸ்திரேலிய அரசு.
கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆப்கான் அகதி ஜாராவை அடிப்படையாக கொண்ட ஆவணப்படத்தை தயாரித்து வந்த ரோபின் ஹுகன், அகதிகள் குறித்து ஆஸ்திரேலியர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் எண்ணத்தில் இப்படத்தை தயாரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.