செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “எங்க கடைக்கு வர்றவங்கயெல்லாம் எங்களுக்குக் குழந்தைங்கதான்” எக்மோரில் உணவுக் கடை நடத்தும் தம்பதி

“எங்க கடைக்கு வர்றவங்கயெல்லாம் எங்களுக்குக் குழந்தைங்கதான்” எக்மோரில் உணவுக் கடை நடத்தும் தம்பதி

6 minutes read

இருவருக்கும் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம் உள்ள சிறுவைகுண்டம். சொந்த மண்ணில் சோற்றுக்கே தடுமாறவைத்த வறுமை, இந்தத் தம்பதியைப் பஞ்சம் பிழைக்கவைக்க, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டது.

ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி

ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி

“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 35 வருஷம் ஆச்சு. குழந்தை இல்லை. ‘எங்களுக்கும் ஒரு குழந்தை வேணும்; அது அம்மா, அப்பானு எங்களை வாயாற கூப்புடுற அந்த வசியவார்த்தையைக் கேட்கணும்; அது தர்ற பாசத்துல காத்தோட காத்தா கரைஞ்சு போயிடணும்’னு கொள்ளை கொள்ளையா ஆசை. ஆனா, அதுக்கு எங்களுக்குக் கொடுப்பினை இல்லை. குழந்தைக்காக நாங்க ஏங்காத நாள் இல்லை.

ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி
ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி

ஆனா, ‘ஒண்ணோ, ரெண்டோ குழந்தைங்க பெத்துக்கிட்டா, அதுகளுக்கு மட்டும்தான் நாம தாயி, தகப்பன். இப்போ நம்ம கடைக்குச் சாப்புட வர்ற பிள்ளைங்களெல்லாம் நமக்கு குழந்தைங்கதான்’னு நாங்க ரெண்டு பேரும் மனசை தேத்திக்கிட்டோம். இப்போ எங்களுக்குக் கணக்கு வழக்கில்லாத அளவுல குழந்தைங்க இருக்காங்க” என்று சொல்லும் பாண்டித்தேவர், ஆறுமுகத்தம்மாள் தம்பதி உதிர்த்த வார்த்தைகளின் அடியில் உறைந்திருக்கிறது அன்பு.

இருவருக்கும் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம் உள்ள சிறுவைகுண்டம். சொந்த மண்ணில் சோற்றுக்கே தடுமாறவைத்த வறுமை, இந்தத் தம்பதியை பஞ்சம் பிழைக்கவைக்க, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டது. இளநீர் விற்பனை, ஜூஸ் கடை என்று சொந்தமாக நடத்திய தொழில்கள் அடுத்தடுத்து பெருத்த அடியைக் கொடுக்க, ஆறுமுகத்தம்மாளின் கைப்பக்குவத்தைக் கொண்டு தள்ளுவண்டியில் இரவு உணவுக் கடையைத் தொடங்கியிருக்கிறார் பாண்டித்தேவர். கடந்த 25 வருடங்களாகப் பழுதில்லாமல் அவர்களுக்குக் கைகொடுக்கிறது இந்தத் தொழில்.

தள்ளுவண்டி இரவு உணவுக் கடை
தள்ளுவண்டி இரவு உணவுக் கடை

தங்களுக்குக் குழந்தை இல்லாத குறையை கிட்டத்தட்ட மறந்து, தங்கள் கடைக்குச் சாப்பிட வரும் ஒவ்வொருவரையும், ‘வா கண்ணு, உனக்கு தோசை புடிக்குமேனு மாவை கொஞ்சம் தனியா எடுத்து வச்சுருக்கேன்’, ‘வா சாமி, ரெண்டு நாளா உன்னைக் காணலையேனு தேடுனேன்’ என்று தாய்ப்பாசத்துடனே அணுகுகிறார் ஆறுமுகத்தம்மாள். அவர்களும், ‘அம்மா’, அப்பா’ என்று இந்தத் தம்பதியை வாஞ்சையோடு அழைக்கிறார்கள். சென்னை, ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் இயங்கி வருகிறது இவர்களது தள்ளுவண்டிக் கடை.

ஆறுமுகத்தம்மாளிடம் பேசினோம். “ஊர்ல விவசாயக்கூலியா வேலை பார்த்தோம். வாழைத்தோப்புகளுக்கு வேலைக்குப் போவோம். 30 வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல கடுமையா பஞ்சம் வந்துட்டு. ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியத்துப்போன நிலைமை. வயக்காடெல்லாம் வெடிச்சுக்கிடக்கு. வாழ விதியத்துப்போன மண்ணுல கெடந்து சாவவா முடியும்? ரயிலேறி சென்னைக்கு வந்துட்டோம். ஆரம்பத்துல நாங்க இங்க படாத கஷ்டமில்லை. இந்தத் தள்ளுவண்டி உணவுக் கடைதான் எங்களை கரைசேர்த்துச்சு. நாலு காசு கொடுத்துச்சு.

ஆறுமுகத்தம்மாள்
ஆறுமுகத்தம்மாள்

அந்தக் காசுல நாலு நல்லதுபொல்லதுகளப் பண்ணிப் பாக்க, என் வயித்துல ஒரு புழு, பூச்சிகூடத் தங்கலை. குழந்தை பாக்கியம் கேட்டு நாங்க போகாத ஆஸ்பத்திரி இல்லை; பார்க்காக மருத்துவர்கள் இல்லை; கோயில் கோயிலா ஏறி வேண்டாத தெய்வமில்லை. ஒரு கட்டத்துல, ‘புள்ளை இல்லைன்னா என்ன, நான் உனக்குப் புள்ளை; நீ எனக்குப் புள்ளைன்னு வாழ்ந்துருவோம்’னு இவர் மனசை தேத்துவார். ஆனா, மத்தவங்க இந்த வழியா குழந்தைகளோட போகும்போது ஏக்கமா இருக்கும்.

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! – ப்ரீத்தி ராய்

ஒருநாள் சமைச்சுக்கிட்டு இருக்கும்போதே, எங்க நிலைமையை நெனச்சு ஓன்னு உடைஞ்சு அழுதுட்டேன். பதறிப்போன என் வீட்டுக்காரர் என்னைத் தேத்தினார். அன்னிக்கு கடைக்குக் சாப்பிட வந்த ஒரு பையன், ‘உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை? என்னை உங்க குழந்தையா நினைச்சுக்குங்க’னு சொன்னான். அவன் அன்புல சடார்னு மனசுமாறி, மனசு தெளிஞ்சேன். அதன் பிறகு, குழந்தைக்காக நான் ஏங்கி அழுறதை நிறுத்திட்டேன். இங்க வர்ற ஒவ்வொரு பிள்ளையையும் என் பிள்ளையா நெனைக்க ஆரம்பிச்சேன்.

ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி
ஆறுமுகத்தம்மாள், பாண்டித்தேவர் தம்பதி
ரா.ராம்குமார்

நான் பண்ணுற தோசை, இட்லி, சப்பாத்தி, சட்னி எல்லாத்தையும் காசுக்காக சமைக்காம, பிள்ளைகளுக்கு சமைக்குற அம்மாவா, தரமா சமைச்சேன். இந்தப் பிள்ளைங்களும் கொஞ்சம் ருசி குறைஞ்சாலும், ‘என்னம்மா, இன்னைக்கு உன் புள்ளைக்கு சமைக்குறாப்புல சமைக்கலையே… என்ன காரணம்?’னு கேட்குற அளவுக்கு இப்போ மாறிட்டு. கைக்குழந்தை, குழந்தைகள்னு அழைச்சுக்கிட்டு யார் வந்து நின்னு, ‘பிள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுங்க’னு கேட்டாலும், அவங்களுக்கு உடனே சாப்பாடு கொடுத்திருவேன். அவங்க தலைகீழா நின்னாலும், அவங்ககிட்ட மட்டும் காசு வாங்க மாட்டேன்.

ஒருநாள் சமைச்சுக்கிட்டு இருக்கும்போதே, அப்படிக் குழந்தை இல்லைங்கிற ஏக்கத்துல, ஓன்னு உடைஞ்சு அழுதுட்டேன். பதறிப்போன என் கணவர் என்னைத் தேத்தினார். ஆனா, கடைக்கு சாப்பிட வந்த ஒரு பையன், ‘உங்களுக்கு யார் குழந்தை இல்லைன்னது. என்னை உங்க குழந்தையா நினைச்சுக்குங்க’னு சொன்னான். அவன் அன்புல சடார்னு மனசுமாறி, உள்மனம் தெளிஞ்சேன். அதன்பிறகு, குழந்தைக்காக நான் ஏங்கி அழுவதை நிறுத்திட்டேன்.

-ஆறுமுகத்தம்மாள்

தள்ளுவண்டி இரவு உணவுக் கடை
தள்ளுவண்டி இரவு உணவுக் கடை

அதேபோல, ‘சாப்பிட காசு இல்லை’னு யார் வந்து நின்னாலும், கொஞ்சமும் யோசிக்காம நானும் அவரும் அவங்களை வயிறார சாப்பிட வெச்சுதான் அனுப்புவோம். காசு, பணத்துல நஷ்டப்பட்டாலும், குழந்தை பாசத்துல நட்டப்பட முடியாது இல்லையா? எங்களுக்குன்னு யாருமில்லை. நான் முன்னாடி போய் சேர்ந்தா அவரும், அவர் முன்னப் போனா நானும் நிராதரவா தவிச்சு நிப்போமேனு முன்னாடி அடிக்கடி கலங்குவேன். இப்போ அந்தக் கவலை இல்லை. ஏன்னா, எங்களை பெத்தவங்களா நினைக்குற இந்தப் பிள்ளைங்க இருக்கிற தெம்புலேயே வாழ்ந்துருவோம்.

நின்னா உட்கார முடியலை, உட்கார்ந்தா நிக்க முடியலைனு உடம்பு முன்ன மாதிரி சொகமா இல்ல. ஆனா, நான் விடாம அனல்ல நின்னு சமைக்குறதுக்குக் காரணம், குடும்ப சம்பாத்தியத்துக்காக தமிழ்நாடு முழுக்க இருந்து இங்க வந்து கிடக்குற இந்தப் பிள்ளைங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கணுமேங்கிற கரிசனம்தான். அம்மாவுக்குத்தானே பிள்ளைகளோட நாக்கு ருசி என்னன்னு தெரியும். சடார்னு கீழே விழுந்து சாவுற கடைசி நொடி வரைக்கும், என்னைத் தேடி வர்ற இந்தப் பிள்ளைங்களுக்கு, என்னோட கைகள் ஓயாம சமைச்சுப் போட்டுக்கிட்டே இருக்கும்” என்றார் நெக்குருகிப்போய்!

பாண்டித்தேவர்
பாண்டித்தேவர்

அதுவரை தன் மனைவி பேசுவதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பாண்டித்தேவர், ” ‘குழந்தை பேறு இல்லையே’னு ஆரம்பத்துல இவ ஒவ்வொரு நாளும் அனத்தும்போது, நானும் மருகிப்போயிருவேன். ஆனா, இப்போ அந்தக் கவலை இல்லை. எங்களுக்கு இப்போ நூத்துக்கணக்குல குழந்தைங்க இருக்காங்க. கடைக்குச் சாப்பிட வர்றவங்களெல்லாம் வாயார அவளை ‘அம்மா’ன்னும், என்னை ‘அப்பா’ன்னும் கூப்புடும்போது, நாங்க அப்படியே நெகிழ்ந்துபோறோம். இந்தத் தெம்பு தைரியத்துலேயே மிச்சக்காலத்தை இழுத்துப்புடிச்சு ஓட்டிருவோம்” என்றார்.

இட்லிப்பானையில் இருந்து வெளிவரும் ஆவியோடு பாசமும் சேர்ந்து மெல்ல பரவ ஆரம்பித்தது!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More