முல்லைத்தீவு நாயாற்றில் அடத்தாக விகாரையிட்டிருந்த பிக்குவின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.
வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அதற்குள் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.
தற்போது இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்விகாரத்தினால் அங்கு தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையில் எவ்வித முரண்பாடுகளும் வெடிக்கவில்லை. எனவே தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் விகாராதிபதி கொலம்பகே மேதாலங்காதர தேரரின் பூதவுடலை ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்வதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் விகாராதிபதியின் பூதவுடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தலைமையிலான குழுவினரால் அடக்கம்செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை கிருலப்பனையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.