கல்வியறிவில்லாத முல்லைத்தீவு மக்களை தமிழ் அரசியல் வாதிகள் குழப்புகிறார்கள் எனக்கூறிய ஞானசாரர் அவர்கள் யாரும் நந்திக்கடலில் கிடைத்த பாடத்தை சரியாக படிக்கவில்லையெனவும் கூறியுள்ளார்.
பொதுபலசேனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் , சில தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாயாறில் உள்ள அந்த பௌத்த விகாரையுடன் நாங்கள் தொடர்பு கொண்ட போது வடக்கு கிழக்கு மக்கள் உண்மையில் எம்மை அன்போடு நடத்தியதாக கூறிய தேரர் , அவ்வாறு தம்மோடு நெருக்கமாக செயற்பட்ட மக்களை , பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டதுடன் யாரோ கூறிய தவறான தகவல்களை கேட்டு மிக மோசமாக நடந்து கொள்கின்றதாகவும் கூறியுள்ளார் .
இந்த நிலையில் அவர்களை பின்னிருந்து வழி நடத்துகின்ற ஏதேனும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு உண்டு என சந்தேகிக்கின்ற வேளையில், அங்கு நடைபெற்ற போராட்டங்களில் முன்னணியில் நின்ற பாதிரிமார்களை நோக்கும்போது இராயப்பு ஜோசப் நினைவிற்கு வந்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கர்தினாலின் கொள்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக்கூறிய ஞானசாரர், நந்திக்கடலில் பட்டதை மறந்து , இன்னமும் தமிழ் மக்களை குழப்பும் வேலையை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவில் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதி கூட இல்லை எனக் கூறிய அவர், அங்கு வாழும் கற்றறியாத சாதாரண பாமர மக்கள் அரசியல் நாடகங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, ஆனால் தாங்கள் ஏதாவது கூறிவிட்டால் உடனடியாக சிறையில் அடைத்து விடுகிறார்கள் எனவும் ஞானசாரர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த விகாரைக்கு சொந்தமான இடம் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொல்பொருள் திணைக்களத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அப்படியிருந்தும் இதை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதமர் அடக்கி வைக்காமல் அவர்களுடைய கை பொம்மை போன்று செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்ரம் சுமத்தியுள்ளார்.
பிக்குகள் அந்த விகாரையில் தங்கி, உண்டு, உறங்கி இருந்தபோது பிரச்சினைகள் எதுவும் இல்லை என்க்கூறிய தேரர் ஆனால் அவருடைய பூதவுடலை எரிப்பதால் தீட்டு வந்து விடுமா? எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.