கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இராணுவத்தினர் மீண்டும் நாய்களைக் குளிப்பாட்டும், கால்வாய்களை சுத்தம் செய்யும் நிலையே ஏற்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சரமவீர, கோத்தாபய மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இராணுவத்தினரே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோதே அவரின் வீட்டு நாய்களை குளிப்பாட்டினார்கள். மரக்கறி விற்கும் நிலை ஏற்பட்டது. வீதி, கால்வாய்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோது விசேட தேவையுடைய இராணுவத்தினர் அவரை சந்திப்பதற்காக 6 தடைவைகள் கடிதம் மூலம் அனுமதி கோரிய போதும் அவர் வேலைப்பளுவில் இருப்பதாக தெரிவித்து அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு வழங்கத்தயாரான போது சில இராணுவத்தினரை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கின்றனர். தாங்களே இராணுவத்தினருக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாக காட்டவே ராஜபக்ஷ்வினர் இந்த வேலைகளை செய்வதாகவும் குற்றம் சாட்டியதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நான்குமாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.