சண்டே ஒப்சேவர். தமிழில் ரஜீபன்

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த முக்கியமானவையாக காணப்பட்டன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்- அவர் இலங்கையின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும், தற்போது அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை பாதித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பதிலளிக்குமாறு கோரப்பட்டார்.

யுத்த கால சம்பவங்களிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச அவர்களை அதிலிருந்து விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

அனைத்து தருணங்களிலும் நீங்கள் கடந்த காலங்களை பற்றியே பேசுகின்றீர்கள் நான் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக வரமுயல்கின்றேன் என கோத்தாபய தெரிவித்தார்.

கடந்த கால விவகாரங்களிற்கு தீர்வை காணாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிச்சயமாக நாங்கள் முன்னோக்கி நகரலாம் என அவர் தெரிவித்தார்.

வடக்குகிழக்கில் அபிவிருத்தி கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் காணாமல்போதல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதி மக்களின் முக்கிய கரிசனைக்குரிய விடயமில்லை என தெரிவித்தார்.

காணாமல்போனவர்கள் குறித்த  கேள்விகளுக்கும் அவர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்களின் துயரங்களிற்கும் ராஜபக்சவின் பதில்கள் தீர்வை வழங்கவில்லை.

2009 இல் யுத்தம் முடிவடைந்த வேளை படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்கள்  குறித்த கேள்விகளிற்கு 13784 பேரிற்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர் அவர்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்.புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளின் வெற்றியை சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

படையினரிடம் சரணடைந்த தங்கள் குடும்பத்தவர்கள் திரும்பி வரவில்லை என வடக்குகிழக்கை சேர்ந்த பலர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்ற அதேவேளை கோத்தபாய ராஜபக்ச இது வெறும் குற்றச்சாட்டு  என்றார்.

காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களை வழங்;கிய குடும்பங்கள் குறித்த பெயர் விபரங்கள் இல்லை,படையினரிடம் அவர்கள் சரணடைந்த நாட்கள் குறித்த விபரங்களும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.அவரின் இந்த கருத்து தனது சகோதரரின் காலத்தில் வெளியான உத்தியோகபூர்வ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் இருந்து மாறுபட்டதாக காணப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வேட்பாளரின் சகோதாரர் மகிந்த ராஜபக்ச நியமித்த இருஜனாதிபதி ஆணைக்குழுக்களின் முடிவுகள் சரணடைந்தவர்கள் திகதிகள் குறித்த பல விபரங்களை கொண்டுள்ளன.

2013 இல் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவில்  14 ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறிப்பிட்ட மனுவில் அவர்கள் முல்லைத்தீவில் அரச கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி வந்தவுடன் சரணடையுமாறு படையினர் விடுத்த வேண்டுகோளை கேட்டு தங்கள் உறவுகளை ஒப்படைத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

சரணடைந்தவர்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்ட பின்னர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர் என அவர்கள் தங்கள் மனுக்களில் தெரிவித்திருந்தனர்.

சரணடைந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றப்படுவதை அவர்கள் மீண்டும் திரும்பிவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் குடும்பத்தவர்கள் பார்த்தவண்ணமிருந்துள்ளனர்.தங்கள் ஆட்கொணர்வு மனுவில் அவர்கள் இதனை தெரிவித்திருந்தனர்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற வேண்டுகோள்கள் அதிகரித்ததை தொடர்ந்து 2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது.2011இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் அந்த ஆணைக்குழு 2009 மேயில் படையினரிடம் சரணடைந்த 1018 பேர் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்திருந்து.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் காணாமல்போனமை தொடர்பில் பெருமளவானவர்கள் சாட்சியமளித்ததால் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததை தொடர்ந்து காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்தார்.2013 ஆகஸ்டில் ஏற்படுத்தப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் படையினரிடம் சரணடைந்தவர்கள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் காணப்பட்டன.

இந்த ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது கிடைத்த ஆதாரங்கள் மூலம் படையினரிடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட பல தனிநபர்கள் பேருந்துகளிலும் ஏனைய வாகனங்களிலும் ஏற்றப்பட்டனர் என்பதும் காணாமல்போனவர்களில் அவர்களும் அடங்குகின்றனர் என்பதும் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

எனினும் செய்தியாளர் மாநாட்டில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் காணாமல் போனவர்களிற்கும் சரணடைந்தவர்களிற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது என குறிப்பிட்டார்.4000 படையினரும் காணாமல்போயுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மோதலின் உக்கிரதன்மையால் உடல்கள் மீட்கப்படாத சந்தர்ப்பத்தில் இவர்கள் காணாமல்போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர் என கோத்தபாய தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டின் பின்னர் தமிழ் பத்திரிகையொன்று தகவல் உரிமை விண்ணப்பத்தின் மூலம் தான் பெற்ற விபரங்களை வெளியிட்டிருந்தது. இராணுவத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அந்த விண்ணப்பத்திற்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதிலளித்திருந்தார்.தனது பணியகத்தில் உள்ள ஆவணங்களின் படி 10,790 மே 19 2009 இல் சரணடைந்தனர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புள்ளிவிபரங்களையும் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட புள்ளிவிபரங்களையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது 2994 பேர் காணாமல்போயுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளரிடம் அவர்கள் குறித்த பதில்கள் இல்லை.அவர் தனது சகோதரரின் அரசாங்கம் உலகின் மிகச்சிறந்த புனர்வாழ்வு நடவடிக்கையை முன்னெடுத்தது என்கின்றார்.உலகின் வேறு எந்த நாடும் எங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்ட அவர் யுத்தத்தின் போது காணாமல்போவது இடம்பெறுவது வழமை என்கின்றார்.