தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 22 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியரின் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றினுள் தவறி வீழ்ந்துள்ளான்.
பயன்பாடின்றி இருந்த அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணைக் கொட்டியிருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆழ்துளைக் கிணற்றை மூடியிருந்த மண் கீழே இறங்கியதாகத் தெரிகிறது.
குழந்தையை மீட்கும் பணியில் மணப்பாறை பொலிசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பல்வேறு மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மேலும், அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்து, குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது.
கிணற்றில் வீழ்ந்தபோது சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணியின்போது 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது. குழந்தையை மீட்டதும் உரிய சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து நவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய அம்பியுலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.
குழந்தையை மீட்கும் அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று காலை மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால், குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
20 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில மீட்பு படையினர் இன்று மதியம் மீட்பு பணியில் இணைந்தனர். அதிநவீன உபகரணங்களுடன் குழந்தையை மீட்கும் பணி நடைபெறுகிறது.
குழந்தை சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.