பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, அந்த அலுவலகத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உயர்ஸ்தானிகர் அலுவலக மேல் மாடியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர் அமைப்புக்கள் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை 10 மணி முதல் கடுங்குளிரினையும் பொருட்படுத்தாமல் பிற்பகல் வரையிலும் தொடர்ச்சியாக கோஷங்களை முழக்கமிட்டு இப்போராட்டத்தினை நடாத்தினர்.
பிரித்தானியாவின் நீதித்துறையில் அரசியல் இருக்கக்கூடாது என்றும், போர்க் குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரியும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதேவேளை “இனப்படுகொலை செய்த யுத்த குற்றவாளிகளை பிரித்தானியாவுக்குள் அனுமதியாதே”, “இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து”, “பிரித்தானியாவில் ஜனநாயக ரீதியில் போராடுபவர்களின் விபரங்களை இலங்கை தூதரகம் சேகரிப்பதை அனுமதியாதே” என்ற கோரிக்கைகளும் எழுப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.