புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வேறு என்பதனால் அவர்களுடன் இணைந்து பயணிப்பது குறித்து அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் உலக தமிழ் பேரவை போன்ற தமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது அரசாங்கத்தின் தற்போதைய நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2014 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், விடுதலை புலிகளுடன் தொடர்புடைய உலக தமிழ் பேரவை உட்பட 16 அமைப்புக்களை தடை செய்திருந்தது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, பயங்கரவாத தொடர்புகள் குறித்து பட்டியலிடப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.
அத்துடன் அதில் 8 அமைப்புகளையும் 267 பேருக்கும் தொடர்புகள் இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என அறிவித்தது. இதன் விளைவாக அந்த குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
எவ்வாறாயினும், முன்னர் பட்டியலிடப்பட்ட குறித்த அமைப்புகளை தடை செய்வதற்கான நடவடிக்கை தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கமல் குணரத்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அது விவாதிக்கப்பட வேண்டும். இப்போது இந்த விடயம் முக்கியமல்ல. நாம் வேறு விடயத்தில் முன்னுரிமை கொடுக்கின்றோம்.” என கூறினார்.
கடந்த வாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு தோற்கடிக்காவிட்டால், எதிர்காலத்தில் பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இலங்கை மற்றும் பிராந்தியத்தில் இந்த ஆபத்தை பிராந்திய நாடுகள் உணர்ந்துள்ளதுடன் இப்புதிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புகளை வழங்கவும் அந்நாடுகள் தயாராக இருக்கின்றன என கூறியிருந்தார்.
அத்தோடு “இந்த அச்சுறுத்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மட்டுமன்றி மியன்மார், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும்” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.