தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
தைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள் தொண்டர்களுக்கிடையிலான மனித நேயமிக்க சமூக பிணைப்புக்கள் மென்மேலும் பலமடையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
தைப்பொங்கல் பண்டிகையின் குறிக்கோள்களை அடைவதற்கு முதலில் இலங்கையர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே அவற்றை நமது எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் யதார்த்தமாக்குவதற்கு நாம் இந்த தைத்திருநாளில் உறுதி கொள்வோம்.
ஒளியினால் இருள் விலகுவதைப் போன்று ஒற்றுமையினால் வேற்றுமை மறையும். அந்த அடிப்படையிலேயே இலங்கையர்கள் என்ற வகையில் நாம் சுபீட்சத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தேசிய இலக்குகளை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதோடு, அதற்காக பல்வேறு உலக நாடுகளில் வாழும் எமது நாட்டை சேர்ந்த அனைத்து சகோதர தமிழ் மக்களும் இலங்கையை தமது தாய்நாடாக கருதி செயற்பட வேண்டும் என நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
தைப்பொங்கல் தின வழிபாட்டுக்குரிய சூரிய பகவான் நமது வாழ்விற்கு சக்தியையும் இருளை அகற்றும் ஒளியையும் கொண்டு வருவதைப் போன்று உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
கோட்டாபய ராஜபக்ஷ
2020 ஜனவரி மாதம் 14ஆம் திகதி