ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் 25 ஆண்டுகள் பொலிஸ் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார்.
1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் நிஷான் குடும்பம் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளது.
கனடாவுக்கு குடியேறும்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் எனவும் தொடர்ந்து அங்கேயே வளர்ந்த நிஷான் துரையப்பா 1995 ஆம் ஆண்டு ஹால்டன் பிராந்திய பொலிஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் இணைந்தார். தற்போது பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
“என் அப்பா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்மா மட்டக்களப்பு. நான் பிறந்தது கொழும்பு. மிகச் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். என்னை ஓர் கணக்காளர், பொறியியலாளர் அல்லது மருத்துவர் ஆக்கிப் பார்க்கவே என் அம்மா விரும்பினார். அவர் ஒருமுறை விடுமுறைக்குச் சென்றிருந்த சமயம் நான் காவல்துறைக்கு விண்ணப்பித்திருந்தேன். விடுமுறையில் திரும்பி வந்த அம்மாக்கு அது அப்போது அதிர்ச்சியாய் இருந்தது.
என் மனைவி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். நான் வாழும் சூழல் மாறிவிட்டது. என் பண்பாட்டு விழுமியங்களை தொடர எனக்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனாலும், இப்போது மகிழ்கிறேன்; கனடா மண்ணில் வாழும் தமிழர்கள் தம் பண்பாடு, கலை கலாச்சாரத்தை தொடர்ந்து பேணி வருகிறார்கள். நான் இழந்துபோனதாய் நினைத்த விடயங்களை மீண்டும் மீட்டித் தருகிறார்கள். நான் பெருமைப்படுகிறேன்.”
– பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி, நிஷான் துரையப்பா. 24.01.2020 பிரம்டன் நகரில் ஆற்றிய உரையின் ஓர் பகுதி.