ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், ஈழத்து மக்களின் வாழ்வையும் கனவையும் போராட்டத்தையும் எழுதுவதில் ஒரு துணிகர இளைஞர் என்று கம்பன் கழகத்தின் விருது விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது.
கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா 2020 நிகழ்வு நேற்று வெள்ளவத்தையில் உள்ள இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தாயகத்தை சேர்ந்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
2020ஆம் ஆண்டு கம்பன் கழக விருதுகளில் ஏற்றமிகு இளைஞர் விருது ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. விருது குறித்த விதப்புரையின் போதே மேற்கண்டவாறு புகழாரம் சூட்டப்பட்டது.
பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் தொடர்ச்சியாக ஈழ மக்களின் உரிமைக்காக எழுதி வரும் தீபச்செல்வன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் இராணுவத்தின் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் என்றும் ஒரு துணிகர இளைஞனான தீபச்செல்வனை பாராட்டும் விதமாக ஏற்றமிகு இளைஞர் விருதினை வழங்குவதாகவும் விருது விதப்புரையில் தெரிவிக்கப்பட்டது.
தீபச்செல்வனுக்கு புதுச்சேரி சட்டமன்ற அவைத் தலைவர் சிவக்கொழுந்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, பாரதிய ஜனதாக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல கணேசன் கேடயத்தை வழங்கினார். அத்துடன் கம்பன் கழ தலைவரும் முன்னாள் நீதியரசருமான விஸ்வநாதன் விருது பொற்கிளியை வழங்கி வைத்தார்.
கம்பன் விழாவில் வருடாந்தம் ஐந்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் அமரர் என். கருணை ஆனந்தன் நிறுவியுள்ள நாவலர் விருதினை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த உரையாசிரியரான பள்ளத்தூர் பழ.பழனியப்பனும், தமிழ்நாடு திருக்குவளை இராம ஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள விபுலாநந்தர் விருதினை நாட்டிய கலாமந்திர் இயக்குநர், நடன ஆசிரியை கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனும், கவிக்கோ அமரர் அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) நிறுவிய மகரந்தச்சிறகு விருதினை இலங்கையின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனுக்கும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் (தமிழ்நாடு) நினைவாக குடும்பத்தினர் நிறுவியுள்ள நுழைபுலம் ஆய்வு விருதினை பேராசிரியர் ப. புஸ்பரட்ணத்துக்கும், புகழ்பெற்ற தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ஏற்றமிகு இளைஞர் விருதினை எழுத்தாளர் தீபச்செல்வனும் பெற்றுக் கொண்டனர்.