ஆஸ்திரேலிய கடல் கடந்த முகாம் செயல்படும் தீவில் அகதிகள் மீது தாக்குதல்
பப்பு நியூ கினியா தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உள்ளூர் கும்பல் தாக்கியதில், ஓர் அகதியின் கால் உடைந்திருக்கிறது. அத்துடன் மேலும் சில அகதிகள் காயம்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல், அகதிகள் தங்கியுள்ள இடத்திற்கு வெளியே நடந்ததாகத் தெரிவித்திருக்கிறார் சூடானிய அகதி யாசிர் உமர்.
“தாக்கியவர்கள் மது அருந்தி இருந்தனர். அதில் எங்களில் ஓர் அகதி அவர்களுடன் சண்டையிட்டார். மற்ற அகதிகள் சண்டையை தடுக்க முயன்றனர்,” எனக் கூறுகிறார் உமர்.
தற்போது, பப்பு நியூ கினியா தலைநகர் ஃபோர்ட் மோர்ஸ்பைவில் தாக்கப்பட்ட அகதிகள் 2013யிலிருந்து மனுஸ்தீவு வைக்கப்பட்டிருந்த அகதிகள் எனக் கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில், சுமார் 200 அகதிகள் ஃபோர்ட் மோர்ஸ்பையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கும் உள்ளூர் நபர்களுக்கும் இடையே இவ்வாறான பிரச்னை தொடர்ந்து நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த பல அகதிகள் இத்தீவில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பப்பு நியூ கினியாவில் உள்ள அகதிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனத் தெரிவிக்கும் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் இத்தாக்குதல் இனவெறியின் காரணமாக நிகழ்ந்துள்ளது என்கிறார்.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியா அரசு, ஆஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து நாடுகடத்தி வருகின்றது. அத்துடன் 2013க்கு ஒட்டிய காலக்கட்டத்தில் வந்த நூற்றுக்கணக்கான அகதிகள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் பலர் இன்றுவரை எவ்வித தீர்வுமின்றி இத்தீவுகளிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
—