நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் நாளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது முறையாக நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
ஆனால், இவர்களில் நான்காவது குற்றவாளியான பவன்குப்தா சார்பில் தற்போது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைக் காரணம் காட்டி, விசாரணை நீதிமன்றமான பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஒத்திவைக்கவேண்டும் என்று பவன் குப்தா சார்பு வழக்குரைஞர் ஏ.கே.சிங் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக, ஏற்கெனவே தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இரண்டு தேதிகளும், பிறகு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன. பிற மூவரும் தங்கள் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி முடித்துவிட்ட நிலையில், இப்போது தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதிக்கு முன்பாக பவன் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது முன்பே சட்ட வல்லுநர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, ஏன் முன்பே நீங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று பவன் குப்தாவின் வழக்குரைஞரை கடிந்துகொண்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்தி வைத்தார் அவர். எனவே இன்னும் சிறிது நேரத்தில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மீண்டும் தூக்குத் தண்டனை விதிப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்படுமா என்பது தெரியவரும்.
நான்கு குற்றவாளிகளுக்கும் ஒன்றாகவே தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை தூக்குத் தண்டனை இருக்குமா?
ஒருவேளை நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க முடியாது என்று பாட்டியாலா இல்ல நீதிமன்றம் கூறுமானால், பவன் குப்தாவின் வழக்குரைஞர் இன்றே டெல்லி உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அணுகி தடை கோர முடியும்.
அது தவிர, ஒருவேளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பவன் குப்தாவின் கருணை மனுவை இன்றே தள்ளுபடி செய்தால்கூட நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் ஒரு சட்டச் சிக்கல் உண்டு. அதாவது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால், அதில் இருந்து குறைந்தது 14 நாள் கழித்தே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பதால் முந்தைய உத்தரவுப்படி நாளையே தூக்குத் தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று நீதிபதி கூறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று இந்த வழக்கை கூர்ந்து பார்த்து வருகிறவர்கள் கருத்து கூறுகிறார்கள்.
வழக்கு
2012ம் ஆண்டு டெல்லியில் இரவு நேரத்தில் தம் ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் ஏறிய இளம்பெண் அந்தப் பேருந்தில் இருந்த நால்வரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கு இந்தியத் தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.