“இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை. சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலரை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ராஜபக்சவினரும் இராணுவத்தினரும் கொலைகாரர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்யான பரப்புரைகளைத் தேர்தல் காலங்களில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் நாங்கள் இந்த நாட்டின் உன்னத வீரர்கள். பயங்கரவாதத்தைக் கூண்டோடு இல்லாதொழித்த மகத்தான வீரர்கள்.
நாம் இந்த நாட்டுக்குத் தேவையான முக்கிய நபர்கள் என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளால் புரியவைத்துள்ளார்கள்.
நாம் இராணுவ ஆட்சியை விரும்பவில்லை. பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினருக்கு உரிய மரியாதையையும் கௌரவத்தையும் கொடுத்து வருகின்றோம். அதனால்தான் நாம் இராணுவ ஆட்சியை நடத்துகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்யுரைத்து வருகின்றனர்.
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். எவரையும் நாம் காணாமல் ஆக்கவில்லை. அதேவேளை, சரணடைந்த எவரையும் நாம் சுட்டுக்கொல்லவும் இல்லை. எம்மைக் கொலைகாரர் என்று சொல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எந்த ஆதாரமும் இல்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.