கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 54 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மிகுதி 28 இலட்ச குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஊடாக நிவாரணம் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 16 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களுக்கு இதுவரையில் 10 இலட்சத்து 7,650 ரூபாய் பெறுமதியான நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜெனரல் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
16 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 5000 ஆயிரம் ரூபாய் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.