வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரது இருப்பிடம் அமைந்துள்ள மகாகச்சகொடி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியாவில் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பாக நாம் கலந்துரையாடியிருக்கிறோம். இதுதொடர்பாக சுகாதார அமைச்சிடம் நாம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். அங்கிருந்து எமக்கு முடிவுகள் கிடைக்கபெறும் பட்சத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும்” என்றார்.