துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன் என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாய்க்கு பிரபாகரன் என பெயரிட்டிருப்பது தமிழர்களையும், அவர்களது உரிமை போரையும் இழிவுபடுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான் யாரையும் இழிவுபடுத்த அந்த பெயர் வைக்கப்படவில்லை என்றும், தவறுதலாக நடந்துவிட்டது என கூறி மன்னிப்பும் கேட்டார்.
இருப்பினும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழின தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்தும் வகையில் உள்ள அந்த காட்சியை படக்குழுவினர் நீக்க வேண்டும். இதுபோன்ற தமிழ் மற்றும் தமிழர் அவமதிப்பு காட்சிகளை மலையாள சினிமா எடுக்காமல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைத்துள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததோடு தயாரிக்கவும் செய்துள்ளதால் துல்கருக்கு இது பெரிய சிக்கலாகவே உள்ளது.