எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் வாரத்தில் நோய்த் தொற்று நீக்குதல், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு சுகாதாரத் துறையினர் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் உயர் தரம் மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவ மாணவியருக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்தரம், சாதாரணதரம் ஆகியனவற்றில் கற்கும் மாணவ மாணவியருக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் தரம் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முகக் கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.