இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றில் இருந்து நலம் பெற்றோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளிகள் 755 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் நேற்று மாத்திரம் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று 4 தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் சுமார் 350 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் பழகிய நபர்கள் எனவும் 10 இராணுவத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ராஜகிரியவிலும், மட்டக்குளியவிலும் 55 பேர் வரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில் தொற்றாளி ஒருவர் இனங்காணப்பட்டநிலையில் 30 பேர் கண்டக்காடு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மட்டக்குளிய மோதரை மாடிக்குடியிருப்பு பகுதி ஒன்றில் 62 வயதான பெண் ஒருவர் இன்று கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் நெருக்கமான 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையினர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.