பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் நாளை வெளியிடப்படவுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்படவுள்ளது.
குறித்த வழிகாட்டல்களின் ஊடாக, தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது, முதல் வாரத்தில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து திட்டமொன்றை வகுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டங்களை வகுத்துக்கொள்ளும் முறை தொடர்பில், கல்வி அமைச்சினால் வௌியிடப்படவுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கிருமி ஒழிப்பு நடவடிக்கை, மாணவர்களுக்கான குடிநீர் வசதி, வகுப்பறைகளில் மாணவர்கள் அமரவேண்டிய முறை, வகுப்பறைகளில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய விடயங்கள் சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.