முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவிகரமாக இருக்கவில்லை என முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சென்ற ஆட்சிக் காலத்திலே அவர்கள் தொடர்பாகவும், பெண்கள் தலைமைத்துவம் தொடர்பாகவும் அரசுடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் பேசினோம். அவர்களிற்கான வேலைத்திட்டங்களிற்காக மிக அதிகமாக நிதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் அலுவலகங்களின் ஊடாக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.
ஆனால் குறித்த நிதி முழுமையாக பயன்படுத்தவில்லை என்கின்ற ஆதங்கம் எங்களிடம் இருக்கின்றது. மேலும் எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பாகவும் முன்னாள் போராளிகள் எங்களிடம் வினா எழுப்பி இருந்தார்கள்.
இந்த போராளிகள் கொள்கைவாதிகளாக, ஒரு இலட்சிய வாதிகளாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் தங்களை அர்ப்பணித்தவர்களாக செயற்பட்டார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிந்தவர்கள். அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளார்கள்.
பொது மக்களும் உயிரிழந்துள்ளார்கள். குறிப்பாக முன்னாள் போராளிகளில் மாற்றுத்தினாளிகளாக அங்கங்களை இழந்து தற்போது நடமாட முடியாத நிலையில் இருக்கின்றார்கள். வாழ்வாதாரம் இன்றியும் உள்ளனர். முன்னாள் போராளிகளின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் பேசி உள்ளார்கள். அவர்கள் அரசியல் ரீதியாகவும், தேசிய கூட்டமைப்பை பலமடைய செய்ய வேண்டும்.
சில வேளைகளில் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறிய கருத்தை அவர்கள் மிகவும் கவலையோடு எங்களிடம் கூறி உள்ளார்கள். முன்னாள் போராளிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் இன விடுதலைக்காக தங்களை தியாகம் செய்தவர்கள்.
அவர்களின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். கட்சியின் தலைவர் என்ற வகையில் கூட்டமைப்பின் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து கூடிக் கதைத்துள்ளோம்.
விரைவில் எங்களுடைய உயர் மட்டக் குழு கூடி இந்த வாரம் கதைக்க இருந்த போது கொரோனா வைரஸ் காலம் மற்றும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் வந்தபடியால் உயர் மட்ட குழுவை கூட முடியவில்லை.
சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவை கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவை எடுக்க இருக்கின்றோம்.
கட்டுப்பாடான இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்றவர்கள் இருக்கின்றார்கள்.
90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இனப்பிரச்சினை எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றதோ அதேபோல் அவர்களுடைய எதிர்காலம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்,வாழ்வாதார ரீதியாகவும் பல்வேறு நல்ல யோசனைகளை முன் வைத்துள்ளார்கள்.
அவர்களின் யோசனைகளை என்னிடம் சமர்ப்பித்து உள்ளனர். முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் மிக முக்கியமானவை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் போராளிகளையும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஈர்க்க வேண்டும் என்கின்ற வேலைத்திட்டத்தை நான் பகிரங்கமாக எழுந்த பிரச்சினைகளின் போது அறிவித்துள்ளேன்.
அனைத்து மாவட்டங்களிலும் குறித்த பிரச்சினைகளினால் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். மன்னார் மாவட்டம் போன்று ஏனைய மாவட்டங்களில் உள்ள முன்னாள் போராளிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளேன். முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்பட உள்ளோம்.
அவர்களுக்கு நம்பிக்கையான பதிலை கூற வேண்டிய கடமை எமக்கு உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.