கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 9 ஆம்திகதி மீண்டும் நடைபெறவுள்ளன.
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, துப்பாக்கிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினரின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போதும், இரண்டு மகசின்கள், 34 வெடிக்கும் தோட்டார்கள், 1 சயனைட், தகடு மற்றும் இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் என்ன மீட்கப்பட்டன.
குறித்த பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இதுதொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#LTTE #Mukamalai #Kilinochchi #Gun #புலிகள் #முகமாலை