முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணைகள் முடிவுற்றதும் முழு விபரங்களையும் பகிரங்கப்பட்டுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கல்முனை இளைஞர் சேனாவுடன் இணைந்து கொண்டு கருணா அவர்கள் என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து வருகிறார். இவர்களின் சதிகளை முறியடித்து முஸ்லிம்கள் தமது இருப்பை தக்க வைத்து கொள்ள வேண்டும். கல்முனை மக்களும், அம்பாறை மாவட்ட மக்களும் இந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
மேலும் பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரமானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் பற்றி அங்குள்ள மக்களின் கருத்துகளை சரியான முறையில் கேட்கப்படவுமில்லை. அண்மையில் தொல்பொருள் செயலனி குழுவொன்று அமைக்கப்பட்டவுடன் இதனை அறிந்த நான் உடனே குழு உறுப்பினர்களை சந்தித்து இவ்விடயமாக கலந்துரையாடினேன்.
அதிலும் குறிப்பாக பொத்துவில் விவகாரம் பற்றி அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இவ்விடயம் தொடர்பில் நெருக்கடியான நிலையில் கூட நான் நிலைமை தொலைபேசியில் அறிவுறுத்தினேன்.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் மக்கள் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. கடந்த கால அசாதாரண காலங்களிலும், விடுதலை புலிகளின் காலத்தில் கூட அங்குள்ள முஸ்லிம் மக்கள் இந்த விகாரையை பாதுகாத்தனர் என்பது வரலாற்று உண்மை.
பொத்துவிலில் நடைபெறும் மக்களுக்கு எதிரான ஆராஜக செயற்பாட்டை அரசியல், கட்சி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து சகலரும் முறியடிக்க வேண்டும். இம் மக்களின் உரிமைக்காய் நாங்கள் களத்தில் நின்று சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இது தனி நபரின் பிரச்சினை அல்ல வெளி நாட்டு சக்திகளுடன் இணைந்து எமது மக்களை சிதைப்பதாகவே நான் இந்த செயற்பாட்டை கருதுகிறேன். இந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உடனடியாக தலையிட்டு சுமுகமாக தீர்க்க வேண்டும். முஸ்லிம் சமூகம் என்றும் விழிப்பாக இருக்க வேண்டும் . இன்று முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றது.
இவ்விடயத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட முன்வர வேண்டும் என சகல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அரசியல் ரீதியாக பிளவுபடாமல் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அதனை செய்து முடிக்க முன்வருமாறு சகலரையும் அழைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.