கொரோனா வைரஸ் வலுவிழந்து விட்டதாகவும் மருந்து தேவையில்லாமல் தானாகவே அது காணாமல் போய்விடுமென்று இத்தாலிய மருத்துவர் மேட்டியோ பாஸெட்டி கூறியுள்ளார்.
ஜெனோவா நகரிலுள்ள சான்மரினோ மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவர் மேட்டியோ பாஸெட்டி கூறுகையில், ” கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் காரணமாக ஆற்றல் குறைந்ததாக மாறியிருப்பதாக தோன்றுகிறது. தீவிரமான நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் தேவைப்பட்டன. சிலர் நிமோனியா காய்ச்சலுடன் வந்தனர். இப்போது, அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.
ஏப்ரல் , மார்ச் மாதங்களில் கோபமடைந்த காட்டுப்புலி போல இருந்த கொரோனா வைரஸ் இப்போது ஆக்ரோஷம் குறைந்த காட்டுப்பூனை போல மாறியுள்ளது. தற்போது, 80, 90 வயதுடைய நோயாளிகள் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் ஆக்ஸிஜன் , வென்டிலேட்டர்கள் தேவைப்படவில்லை. சாதாரணமாக சுவாசிக்கிறார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதே வயதுடையவர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்களில் இறந்து போயிருப்பார்கள்.
வைரஸ் பலமிலப்பதற்கு நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி அதற்கு ஏற்ற வகையில் செயல்படத் தோடங்கியிருப்பது ஒரு காரணம். லாக்டௌன் காரணமாக சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது போன்றவற்றால் நோய் தொற்று பரவுவதும் குறைந்துள்ளது. இதனால், மருத்துவத்துறைக்கு சற்று சுமை குறைந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பே கொரோனா வைரஸ் காணாமல் போய்விடலாம். தற்போது, இத்தாலியில் குறைவான மக்களுக்கே கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர் ” என்று தெரிவித்துள்ளார்
அதேவேளையில் , இங்கிலாந்தின் எக்ஸிடெர் மருத்துவப் பல்கலை பேராசிரியரான டாக்டர் பாரத் பங்கானியா இத்தாலி டாக்டர் பாஸெட்டியின் கருத்தை மறுத்துள்ளார் . இது குறித்து அவர் கூறுகையில், “வைரஸ் விரைவாக காணாமல் போகுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நம்மிடம் தடுப்பூசி இருந்தால் மட்டுமே அந்த நோயால் யாராலும் பாதிக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், கொரோனா வைரஸ் ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்கு மிக வேகமாக பரவும் நோயாக இருப்பதால், நீண்ட காலம் இருக்கும் ”என்கிறார்.