செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நான் பிரதமரானால்: வவுனியாவில் சஜித் வழங்கிய வாக்குறுதிகள்!!

நான் பிரதமரானால்: வவுனியாவில் சஜித் வழங்கிய வாக்குறுதிகள்!!

2 minutes read

நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி அமைத்து பிரதமராகி 24 மணி நேரத்தில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதோடு, 2025 இல் நாட்டில் வீடில்லா பிரச்சினை முற்றாக ஒழிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் இனங்கள் மற்றும் மதங்கள் இடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவும் நடைமுறைப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்து செயற்படுவேன்.

பொதுவாக எல்லா மதத்திலும் ஒரு சிலர் பிழையான பாதையில் செல்வதை நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் அதிகளமான மதங்களில் நல்வர்களே உள்ளனர். ஒரு சிலரே இனவாத சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர். அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களாகவும் பயங்கரவாத சிந்தனை கொண்டவர்களாவும் இருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல மோசமான சம்பவங்கள் இடம்பெற்றது. அவற்றை எல்லாம் வைத்து தமிழ் மக்களை குற்றவாளிகளாக பார்த்தமை மிகவும் மோசமான செயலாகும். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த தமிழ் சமூதாயத்தினை தவறாக சொல்ல முடியாது.

அதே போல்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் மோசமான சம்பவம். அதை யார் செய்திருந்தாலும் அனுமதிக்க முடியாது. தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் செய்த அந்த தவறை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முடியாது. அவ்வாறு திணித்தால் இது தவறானதாகும்.

பௌத்த மதத்திலும் அவ்வாறான இனவாத சிந்தனை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்கள்.

எனது தந்தை ரணசிங்கள பிரேமதாசா இனங்களுக்கிடையில் புரிந்துணர்வோடு நடந்துகொள்ளுங்கள் என்பதனை சொல்லித்தந்துள்ளார். இனங்களிக்கிடையிலும் மதங்களிக்கிடையிலும் ஒற்றுமையாக வாழ பழகுங்கள், இவ்வாறு இருந்தால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். எனவே இந்த சிறிய நாட்டில் நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாக வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார்.

எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இனங்களுக்கிடையில் பிரிந்துவிடாமலும் பிளவுபட்டுவிடாமலும் வாழவேண்டும். அதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாவும் கோட்பாடாகவும் உள்ளது.

இந்த அழகான தேசத்தினை பிரித்தாளுவதனூடாக தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் ஆட்சியில் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்காக சதிகாரர்கள் சதி செய்துகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான சதிகாரர்களின் வலையில் நாங்கள் வீழ்ந்து விடாமல் மிக நிதானமாக செயற்பட வேண்டும். இந்த தேசத்தின் எதிர்காலத்திற்காக அபிவிருத்திக்காக உங்களை அர்ப்பணித்து செயற்படுபவர்களாக உங்களை நீங்கள் உருவாக்கி கொள்ள வேண்டும். பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒரு பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுதான் எமது இலக்காக இருக்கின்றது. அதற்காகதான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தேன்.

நான்கு பேரைக் கொண்ட குடும்பத்திற்கு குறைந்தது 20,000 ரூபா அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆகவே அதற்காக திட்டத்தினை மேற்கொண்டு வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு நாங்கள் கடந்த காலத்தில் முயற்சித்திருந்தோம். ஆனால் அவ்வாறான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. எனவே இனியாவது பொருளாதார மீட்சியுடன் வாழ்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோருங்கள்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நீங்கள் அளிக்கும் வாக்குகளினால் நாங்கள் நல்லாட்சி ஒன்றினை அமைத்து 24மணி நேரத்தில் மண்ணெண்ணை, பெற்றோல் மற்றும் டீசலில் விலையைக் குறைத்து அதனூடாக மக்களுக்கு நன்மையினை வழங்குவேன்.

அத்துடன் வீடுகள் இல்லாத பிரச்சினைகளுக்காக கடந்த காலத்தில் நாங்கள் வீடுகளை அமைத்துகொண்டுத்திருந்தோம். அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் எமக்கான ஆதரவை தந்து நான் பிரதமராக வருகின்ற போது 2025 ஆம் ஆண்டுக்கள் வீடில்லாத அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் சுயதொழில் மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதரத்தினை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தினை நாம் முன்னெடுப்போம். அத்துடன் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த பாரிய திட்டங்களை முன்னெடுப்போம். அத்துடன் சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவோம் என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More