கந்தக்காட்டில் உள்ள சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கந்தக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மையத்தில் உள்ள அனைத்து ஆலோசகர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பரிசோதனைகளின் முடிவுகள் வந்துவிட்டன. இந்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளும் விரைவில் கிடைக்கவுள்ளன.
மேலும், கைதிகளை பார்வையிட்ட 116 பேருடன் தொடர்புகொண்ட 378 பேரின் பரிசோதனை முடிவுகளும் பெறப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த பரிசோதனை முடிவுகளில் யாருக்கேனும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்புடைய அதிகமானவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இது அடுத்த 2 நாட்களுக்குள் இடம்பெறலாம்.
எனவே, இந்த வாரத்திற்குள் கொரோனாவால் பாதியக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் தவறவிடப்பட்டனரா என்பதை அறியமுடியும். இந்தச் செயன்முறைக்கு எதிர்வரும் 4 நாட்கள் மிக முக்கியமானவை.
இதேவேளை, பொதுமக்கள் இந்த நெருக்கடியான சூழலில் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு வெளியிடங்களுக்குச் செல்லும்போது முகமூடி அணிவதுடன், கைகளை கழுவதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிக முக்கியமானது.
எனவே, சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த சுகாதார நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால், கொரோனா வைரஸை சமூகத்திலிருந்து எளிதில் இல்லாமற்செய்ய முடியும்” என சவேந்திர சில்வா தெரிவித்தார்.