தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் முடிந்தளவிலான காணிகளை நாம் விடுவித்துள்ளோம். இப்போது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 10இற்கு 2 வீதமான காணிகளே எஞ்சியுள்ளன.
சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு முகாம்களை அப்படியே வைத்துள்ளோம். இந்த முகாம்களை எதிர்காலத்திலும் அகற்ற மாட்டோம்.
ஏனெனில், எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்புக்காக இராணுவ முகாம்கள் இருப்பது வழமையாகும்.
எனினும், சிறியளவிலான இராணுவத்தினரே இங்கு உள்ளார்கள். எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, தேவையேற்பட்டால் ஏனைய காணிகளை விடுவிக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
சிலர் இராணுவம் தொடர்பாக தவறாக பேசுகிறார்கள். இது ஜனநாயக நாடு என்பதால், அனைவருக்கும் கதைக்க உரிமையுள்ளது.
ஆனால், ஒரு கருத்தை வெளியிடும்போது, அது சரியா- தவறா என்பதை ஆராய்து வெளியிடுவதே மூளையுள்ள மனிதனுக்கு அழகாகும்.
வடக்கிலுள்ள தமிழர்களுக்கு இராணுவம் தொடர்பாக நன்றாகத் தெரியும். நாம் இவர்களுக்கு எவ்வாறான சேவை செய்துள்ளோம் என்பதை மக்கள் அறிவார்கள்.
நாம் தேசிய பாதுகாப்புக்காகத் தான் செயற்படுகிறோம். எமது செயற்பாடுகள் வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.