சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே தேரர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சமஷ்டி என்றால் பிரிவினை. அது தனிநாடு என்றுதான் அர்த்தம். அதாவது இந்தச் சமஷ்டி தீர்வு இலங்கையைப் பிளவுபடுத்தும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் தீர்ப்பையும் தூக்கிக் குப்பையில் வீசுங்கள்.
தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை.
அரசு வழங்கும் தீர்வைத்தான் தமிழர்கள் ஏற்கவேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ராஜபக்சக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். இது சிங்கள பௌத்த நாடு. எனவே, தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
அப்போதுதான் சிங்கள மக்கள் விரும்பும் தீர்வைத் தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டக்கனியாகவே இருக்கும். பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டி பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.