புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இசைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை!

இசைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை!

2 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) கட்டளை வழங்கியது.

இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே 13ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும் என அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் குமார் ரட்ணம் விண்ணப்பத்தை முன்வைத்தார்.

ஏற்கனவே, இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம்சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக இந்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு கட்டளையை வழங்கியது.

கண்ணதாசன் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கட்டளை வழங்கியது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கண்ணதாசன் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More