இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும் 25 நாட்கள் நடைபெறும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 13 ஆம் திகதி கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும் 17 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே கூறப்படுகின்றது.