நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு தியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 24 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 789 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 141 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.
இலங்கைக்கான ரஷ்யா தூதுவரான யுரி மதேரி மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்று சிறந்த முறையில் கட்டுபடுத்தப்பட்டமைக்கு ரஷ்ய தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவினால் தயாரிக்கப்படுகின்ற கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனை மற்றும் அனுமதிளை பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் இதன்போது பதிலளித்துள்ளார்.