மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளிவிழாக் காண்டவர். இவர் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் யாழ். மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை உட்பட இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மருதமடு அன்னை ஆலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மறைமாவட்டம் மட்டிலான தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தார். திருப்பலி, திருவிழாக்கள், பங்குத்தரிசிப்புக்கள், ஆலோசனைகள், கூட்டங்கள், மாநாடுகள், ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள், ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளை மேற்கொண்டு வந்தார்.
பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார்.
முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.
துன்புற்ற மக்களின் துயர் துடைத்தார்
ஒரு கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.
சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார்.
யுத்தத்தால் தமது இல்லிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். முள்ளிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் அவர் காணிகளை, வீடுகளை வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.
யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வோதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார்.
யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசாலையில் கடற்படையினருக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலின்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.
ஆலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் செல்கின்ற செய்தியை அறிந்த ஆயர் ஆபத்தான அந்தச் சூழ்நிலையில் அன்றைய மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசாலைக்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இச்சம்பவம் தொடர்பில் வத்திக்கானுக்கு தகவல்களை அனுப்பினார்.
2007ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலுப்பைக்கடவை படகுத்துறைப் பகுதியில் விமானக் குண்டுத்தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அந்தத் தாக்குதல் நடந்த சில மணித்தியாலங்களில் குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளாருடன் அந்த இடத்திற்கு சென்று அம் மக்களின் துயரத்தில் பங்குகொண்டதோடு கொல்லப்பட்டவர்கள் கடற்புலிகள் என்ற அரசின் செய்தியை மறுத்து பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை உலகத்திற்குத் தெரியப்படுத்தினார்.
மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்களோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளை எழுத்து மூலமாக அறிக்கையாக முன்வைத்தார். காணாமலாக்கப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு போன்ற உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பல விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்களை அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வன்னியில் இருந்த மக்களில் 146,679 பேருக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை கேட்டு அரசாங்கத்தை ஆட்டம்காணம் செய்தார்.
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டனங்களுக்கு ஆயரின் விளக்கம்
2012ஆம் ஆண்டு லக்பிம என்ற சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தன்னைப்பற்றிய பல விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்திருந்தார். நீங்கள் சர்ச்சைக்குரிய ஆயர் என அழைக்கப்படுகின்றீர்கள். இதுபற்றிய உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு அவருடைய பதில், நான் சர்ச்சைக்குரிய ஆயர் என அழைக்கப்படுகின்றேன். ஏனென்றால் சர்ச்சைக்குரிய விடயங்கள் நடைபெறுகின்றன. நான் அந்த விடயங்கள் பற்றிப் பேசும் போது சர்ச்சைக்குரிய ஆளாக மாறுகின்றேன்.
நான் உண்மையைப் பேசுவதால் வெளிப்படையாகப் பேசும் ஆயர் என்கின்றனர். நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர். இப்பெயர்களைப்பற்றி நான் அலட்டிக்கொள்வது இல்லை. நான் தொடர்ந்தும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவேன். மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுவேன்.
நீங்கள் விடுதலைப் புலியா? அல்லது அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளரா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், நான் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. என்னை அப்படி அழைப்பது அவர்களின் பலவீனம்.
நான் விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவற்றை கண்டித்திருக்கிறேன்.
ஒரு குரு என்ற வகையில், உண்மையையும், வாழ்வையும், வழியையும் வெளிப்படுத்தி வன்முறைக்குப் பலியான இயேசுவை பின்பற்றுகிறவன் என்ற வகையில் நான் எனது கடமைகளைச் செய்கின்றேன் என்றார்.
பணி ஓய்வு
1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவர் சுகவீனமடையும்வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கிவந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக பாப்பரசர் பிரான்சிஸிஸ் அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார்.
2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கம் “இனமான ஏந்தல்” என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.
குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விளைய வேண்டும்.
காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடு, உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றைய, நாளைய தலத்திருச்சபைக்கு சவாலாக, விழிப்புணவர்வாக, உந்துதலாக அமைய வேண்டும்.
நன்றி – இணையம்