செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

7 minutes read

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி பயணப்படுகிறேன். மீண்டும் அந்த வாழ்வைநோக்கி, து ஒரு படம் அல்ல அது தான் நான்…

-வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்

திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு, காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு, மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா.

முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி, சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும்.

வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி, வாங்கின கணக்கு, அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை, அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா.

“எணை, பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க, வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி. அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்” எண்டு திருப்பிக் குடுத்தான்.

எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag, கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும். அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி).

மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு, போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும்.

மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள், மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான். நல்ல தமிழ் மணம், மீன் சந்தையையும் தாண்டி மணக்கும்.

அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம். எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள்.

பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய், வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி.

அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான். கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை, அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு, பவுண் மூக்குத்தி, சுருங்கின நெத்தீல மூண்டு குறி, நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம்.

சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம். பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம்.

ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும், கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான், ஒண்டில சோளம், ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும். ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம்.

ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு, சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு, வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம்.

வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு, உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம்.

கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம், எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம்.

குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு, “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா, லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும்.

அந்தந்த ஊரில இருக்கிற, விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது . வெங்காயம், புளி, நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை.

காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார். இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர்.

போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம்.
இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு.

இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம். பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம். கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம்.

வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும். சீலை சுத்தின திருகணை, அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள், காறாத்ததல், அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள்.

தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி, கடைவாயில வெத்திலைச் சாறு, anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் .

திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம். Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம்.

ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம்.

அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம், மாசீல பனங்கிழங்கு, வைகாசீல பாலைப்பழம், ஆவணீல மாம்பழம், புரட்டாதீல பனங்காய் பணியாரம், ஐப்பசீல நாவல் பழம், கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை.

வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம். மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த, விசேசங்களுக்கு பலகாரம் சுட, சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம். வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ, மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம்.

நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை. ஐம்பதை எட்டிற வயசு. பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார். கரைசேக்க இரண்டு குமர், சொன்னா கேக்காத கழிசறை இரண்டு, கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு, எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை . வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும்.

எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும். கச்சான், சோளம், மாங்காய், பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா. ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது, அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா, ஒரு நாளும் complain பண்ண மாட்டா.

எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம்.
வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது.

எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ, ஆச்சி ஒரு special தான். ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்.

வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் தொடரின் முன்னைய பதிவுகள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More