மகாபாரதத்தை மற்றொரு கோணத்தில் காண்பித்த மெகா பிரம்மாண்ட படைப்புதான் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான ‘கர்ணன்’. இப்படத்தில் வரும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ தமிழர்களின் உள்ளத்தில் உறங்காமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடல். கர்ணன் சூழ்ச்சி அம்புகளால் குத்தப்பட்டு, குத்துயிரும் குலையுயிருமாக கிடக்கும்போது, கண்ணன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் உயிர்தானம் கேட்கும் பாடல்தான் ’உள்ளத்தின் நல்ல உள்ளம்’. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும்கூட அனைவரது உள்ளத்திலும் மேலோங்கி நிற்கும் இப்பாடலை, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தனது அற்புதமான குரலால் பாடி இதயத்தை உருக்கியிருப்பார். சமீபத்தில் இப்பாடலை ஒரு இசை விழாவில் வழக்கம்போல தனது பாணியில் பாடி, சமூக வலைதளங்களில் சர்ச்சை அம்புகளுக்கு ஆளாகியிருக்கிறார் பாடகர் சித் ஸ்ரீராம் . இந்த நிலையில், மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மகனும் பாடகருமான டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்திடம் பேசினோம்,
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவது?
”இந்தப் பாடலில் ஒரு சோகத்தை வெளிப்படுத்தவேண்டும். ’வஞ்சகன் கண்ணனடா’ என்று வரும்போது கண்ணனுக்கு உள்ளுக்குள் குற்றவுணர்வும் இருக்கும். அதனை நினைத்து சோகமாகிவிடவும் கூடாது. அதேசமயம், சோகம் இல்லாமலும் இருக்கக்கூடாது. இத்தனை பொறுப்புகளை ஒரு குரல் பிரதிபலித்துள்ளது என்றால், இசை மேதை எனது அப்பா சீர்காழி கோவிந்தராஜனையே சேரும். கண்ணன் வேறு உருவில் வந்து ’கர்ணன் இவ்ளோ நல்லவன், இவனுக்கு இப்படி பண்ணுகிறோமே’ என்ற கணத்த இதயத்துடன் பாடிக்கொண்டு வருவார். அவர், மனதில் உள்ளக் கணத்தை, எனது அப்பாவின் குரல் அப்படியே பிரதிபலிக்கும். அதனால், அப்பாவின் குரலை இப்பாடலுக்கு எவ்வளவு பொருத்தமாக பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுதான் எப்போதும் நினைவுக்கு வரும்.
‘கர்ணன்’ படம் வெளியாகும்போது எனக்கு 5 வயதிருக்கும். சிறு வயதிலிருந்தே கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் நான். அப்பாவின் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ எப்போதுமே ஸ்பெஷல். ஏனென்றால், இது ஜெயிக்கிறப் பாடல். எப்பேர்பட்ட இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்தப் பாடலைப் பாடினால் யாராவது இரண்டுப் பேர் கண்ணை துடைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போதும், சூப்பர் சிங்கரில் பாடினால் அந்த ரவுண்டில் செலெக்ட் ஆகிவிடுவார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகியும் மெல்லிசை மன்னர்களின் இசையும் அப்பாவின் குரலும் நிலைத்து நிற்கிறது”.
இப்பாடலை, சமீபத்தில் இசை விழாவில் சித் ஸ்ரீராம் தனது பாணியில் பாடியதை ’கர்ணவதை’ என்று விமர்சனம் செய்கிறார்களே?
“சித் ஸ்ரீராமின் முயற்சி தனியானது; வித்தியாசமானது. இதற்கு முன்பு, முத்து சிற்பி என்பவர் சுருதி அதிகம் வைத்து சூப்பர் சிங்கரில் பாடினார். அது ஒருவிதமான மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. அதேபோல சித் ஸ்ரீராமும் தனி முயற்சியில் பாடுயுள்ளார். இதுவும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தருகிறது. சித் ஸ்ரீராம் நல்ல பாடகர். பொதுவாகவே நல்ல பாடகர்கள் தங்கள் திறமையை பாடல்களில் காட்டவேண்டும் என்று எக்ஸ்ட்ரா சங்கதிகள் போட்டு பாடக்கூடிய காலக்கட்டம் இது. எங்கள் காலத்தில் அப்படியில்லை. பாடகர் எப்படி பாடினாரோ அப்படித்தான் பாடவேண்டும். இசையமைப்பாளர் சொல்லிக்கொடுப்பதைவிட நாம் எக்ஸ்ட்ரா ஒரு சங்கதி பாடினாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பாடகர்களும் அப்படிப் பாட மாட்டாரகள்.
இப்போது, அப்படி இல்லை. சித் ஸ்ரீராம் ஒரு சினிமா பாடலில் தனது திறமையைக் காட்ட இடம் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அவருக்கான சுதந்திரத்தை, திறமையை இசை விழா மேடையில் காட்டி வெளிப்படுத்தியுள்ளார். அதில் தவறில்லை. தவறாகவும் பாடவில்லை. நாம் கேட்டதிலும் ஒரு தவறும் இல்லை. தனக்கு பிடித்த பாடலை அழகுப்படுத்திப் பாடியுள்ளார். சங்கீதம் என்பது பாடும்போது கலைஞர் உள்ளத்திலிருந்து உருகி, ஆறாகப் பெருகி இன்பம் தருவதற்காக செவிகளில் தேனாகப் பாய்கின்ற விஷயம். அதனை, அனுபவிக்கவேண்டுமே தவிர குற்றம் கண்டுப்பிடிக்கக் கூடாது.
இது இசைவிழா மேடைக்காகப் பாடப்பட்டது. எக்ஸ்ட்ரா சங்கதிப்போட்டா 6 நிமிடப் பாடலை 10 நிமிடத்திற்குப் நீட்டிப் பாடலாம். தமிழ் பாடலில் குறைந்த பயிற்சி கொண்டவர்கள் முக்கியமான இடங்களில் பாடும்போது இருக்கும் இரண்டுப் பாடல்களை ஸ்வரம் எல்லாம் போட்டு நேரத்தை நீட்டிப்பார்கள்.
இலக்கணத்தை அமைத்துவிட்டு, அது மாறும்போது பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ’எனக்கு வெறும் காஃபி கொடுங்கள். கண்டதைப் போட்டு காஃபியே மறந்துப் போய்டுச்சியா’ என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் மாற்றியும் கேட்டுக் குடிக்கிறார்கள். அப்படித்தான், ரசனை மாறுகிறது. அதனால், சித் ஸ்ரீராம் பாடியதை ஒரு மசாலா காஃபி என்று எடுத்துக்கொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் கர்ணவதை என்று சொன்னால், அது அவர்களின் சுதந்திரம்”.
சித் ஸ்ரீராம் பாடியது உங்களுக்குப் பிடித்திருந்ததா?
”சித் ஸ்ரீராம் பாடியதை நான் இரண்டு வரிகள்தான் கேட்டேன். இப்போது, என்னை அந்தப் பாடலை மாற்றிப் பாடச்சொன்னால் பாடமாட்டேன். எனது அப்பா போட்டக் கோட்டினை தாண்டக்கூடாது என்று நினைப்பவன் நான். அவர், அளவுக்கு யாரும் பாடமுடியாது என்பது எனது தாழ்மையானக் கருத்து. தவம் இருந்து பாடியமாதிரி அவரது குரல் வளத்தால் பாடிய பாடல் அது. அதனால், பயபக்தியுடன் பாடுவேன். நான் பாடும்போது மெல்லிசை மன்னர்கள், என் அப்பா, கவியரசு கண்ணதாசன் கண் முன்னால் வந்து ’சங்கதி போட்டு வார்த்தையை சிதைச்சிடாத’ன்னு நிற்பார்கள். மெல்லிசை மன்னர்கள் கிரகித்த அனுகிரகம் அது. அவங்களை மிஞ்சி நாம் எக்ஸ்ட்ராவா பாடணும் என்று மாற்றிப்பாடமாட்டேன். அதிகப்பிரசங்கித்தனமாகப் பாடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் எனக்கு உண்டு. மெல்லிசை மன்னர்கள் தங்கள் மேடை நிகழ்ச்சிகளிலேயே என்னை அழைத்து இந்தப் பாடலை பாடவைத்து ஆசிர்வாதம் செய்துள்ளனர். அதனால், எனக்கு பாடலின் அருமை தெரியும். அதேசமயம், நான் மாற்றிப்பாடினால் மக்கள் ரசிப்பார்களா என்ற கேள்வியும் எழும்.
சித் ஸ்ரீராம் அமெரிக்காவில் வளர்ந்தவர். அங்கேயே கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டு வந்துள்ளார். நல்லப் பாடகர். நல்ல குரல்வளம் கொண்டவர். இந்தப் பாடலை எப்படியெல்லாம் அழகு செய்து ஒரு கீர்த்தனம் மாதிரி சங்கதிகள் போட்டுப் பாடலாம் என்று பாடியிருப்பார். அதனால் சித் ஸ்ரீராம் பாடியதையும் தவறாக நினைக்கத் தேவையில்லை. இந்துஸ்தானி இசையில் கூடுதலாக சங்கதிப்போட்டுப் பாடியிருக்கார் போல. ஏற்கனவே, ஒரு பேட்டியில் ‘எனக்கு கர்ணன் படத்தின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ ஃபேவரிட் என்று கூறியுள்ளார். அந்த ஃபேவரிட் பாடலை சிதைக்கணும்ங்கிற நோக்கத்தில் பாடினார் என்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவரும் ஒரு திரை இசை பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்தவர். இசை விழா என்பதால் கொஞ்சம் டெக்கரேஷன் செய்து பாடியுள்ளார். அவ்வளவுதான்.
அவர் பாடியதில் நான் இரண்டு வரிகள் மட்டும்தான் கேட்டேன். அதைவைத்து என்னால் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா என்பதையெல்லாம் சொல்லமுடியாது. நான் வெறுமெனே சங்கதிகளைக் கேட்டு அசருகின்றவன் கிடையாது:மயங்குபவன் கிடையாது. அந்தப் பாடலுக்கு என்ன அழகு இருக்குங்கிறதைப் பார்ப்பேன். நகை இருக்கு என்பதால் காதுல,கண்ணுல, மூக்குல, புருவத்துல, தாடையில் ஒன்னு என்று போட்டால் ஒரு விகாரமா தெரியுமில்லையா? அந்த மாதிரி நடப்பதும் உண்டு. இதுவே, ஒரு ஆர்கெஸ்ட்ராவுடன் பேக்ரவுண்ட் இசையுடன் இதேப்பாடலை பாடும்போது ஒப்புக்கொள்ளமாட்டார்கள் இல்லையா?”.
அதிகரித்துவரும் ஒமைக்ரானிலிருந்து மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை மருத்துவராகச் சொல்லுங்களேன்?
“ஒமைக்ரான் ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. டெல்லியில்தான் முதலில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர். இதுவரை வந்த அறிக்கைகளின்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டிசிவர், ஸ்டீராய்டு மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் பயன்படுத்தவில்லை. ரொம்ப பெரிய பாதிப்புகள் இல்லை. ஆக்சிஜன் வைக்கும் சூழலும் இல்லை. நம் நாட்டில் 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். அதனால், ஒமைக்ரானால் விளைவுகள் குறைவுதான். அநாவசியமாக பயப்படவேண்டாம். எப்போதும்போல, மாஸ்க் போடுவது, கை கழுவுவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது என்று சமூக சமூதாய பொறுப்புணர்வோடு செயல்பட்டாலே போதும். தற்போது குளிர்காலம் என்பதால் சாதாரணக் காய்ச்சல் வந்தாலே மக்கள் பயப்படுகிறார்கள்”.
நேர்காணல்: வினி சர்பனா | நன்றி: புதியதலைமுறை