அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியுமானால் அதுவே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை உருவாகும்.
அந்த நம்பிக்கையே நாட்டின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அடிப்படையாக அமையும்.
புலம்பெயர் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர நாம் ஒரு பாலமாக செயற்பட தயாராக உள்ளோம், ஆனால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க அரசாங்கம் இதய சுத்தியுடன் அரசியல் தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- சர்வகட்சி கூட்டத்தை பிரதான எதிர்கட்சிகள் நிராகரித்திருத்த நிலையில் கூட்டமைப்பு பங்கேற்றமைக்கான காரணம் என்ன?
பதில்:- நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது, மோசமான பாதையில் நாடு பயணித்துக்கொண்டுள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் சுட்டிக்காட்டினோம்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் நான் ஒரு தனி எம்.பியாக சகல கட்சி தலைவர்களையும் கூட்டி நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராய்ந்து யோசனைகளை முன்வைத்தோம். அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை.
இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள ஆரம்பத்திலேயே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
எனினும் நாட்டின் நிலைமைகள் மிக மோசமாக மாறியுள்ள வேளையில் அரசாங்கத்தினால் இந்த சூழ்நிலையை கையாள முடியாது போயுள்ள வேளையில் சர்வகட்சி மாநாட்டை கூட்யிருந்தது.
இவ்வாறான நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நாம் கூறினோம் நீங்கள் கேட்கவில்லை, எனவே இப்போது வரமாட்டோம் என்று கூறி சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதில் அர்த்தமில்லை.
இலங்கையின் சரித்திரத்தில் இதுவரை கண்டிராத மிக மோசமான பொருளாதார நெருக்கடியொன்றை நாடு எதிர்கொண்டு வருகின்றது.
இது சகல மக்களையும் பாதிக்கும் விடயமாகும். தமிழ் மக்களையும் இது மோசமாக பாதிக்கின்றது, வடக்கு, கிழக்கில் இருந்து மக்கள் இந்தியாவிற்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பசி பட்டினி, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலை என்று சகல மக்களும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர், விலைவாசி உயர்வு மக்களுக்கு பேரிடியாக உள்ளது.
இதில் அரசாங்கத்தை குறைகூறிக்கொண்டு மக்களை கைவிடுவது பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடாக அமையாது.
அரசாங்கம் பொறுப்பில்லாது செயற்பட்டாலும் அதனை சாட்டாக வைத்துக்கொண்டு நாமும் பொறுப்பில்லாது நடந்துகொள்ள முடியாது.
நாடு எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையின் போது எமது யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து அதன் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே எமது நோக்கமாகும்.
ஏனைய கட்சிகள் கூட்டத்தை பகிஷ்கரிக்க முடியும், ஆனால் ஏனைய கட்சிகளின் தீர்மானத்திற்கு அமைய எம்மால் தீர்மானம் எடுக்க முடியாது.
எது சரியானதோ அதனையே நாம் சிந்திக்க வேண்டும். இப்போது நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும், எமது மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசியலுக்கு அப்பால் சகல மக்களுக்காகவும் சென்றோம்.