நினைவு பூத்திருக்கும் கற்களை
வேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்
ஆடியது தேசம்..
கல்லறைகள் உடைக்கப்பட்டன
மறுக்கப்பட்ட இருப்பிற்காய்ப்
போராடி மாய்ந்தவர்களுக்கு
உறங்க இடம் மறுக்கப்பட்டது
காயம்பட்ட மரங்கள்
மீண்டும் தழைக்கின்றன
வீடுகளின் மூலைகளிலும்
தெருக்களின் சந்துகளிலும்
நகரங்களுக்கு மேலாயும்
கிராமங்களிலும் ஒளி ஊற்றெடுக்கிறது
வெளிச்சம் அணைக்கப்பட்ட
தேசத்தில் விளக்குகள் எரிகின்றன
உயிர்மரங்கள் தறிக்கப்படுகையில்
துடித்தன தாய்மார்களின் வயிறுகள்
அழிக்கப்பட்ட தேசத்தில்
பூத்திருக்கின்றன செங்காந்தள் பூக்கள்.
-தீபச்செல்வன்
2011