செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை குருதியில் தோய்ந்த ‘மை லாய்’ படுகொலை | உலகை உலுக்கிய வியட்னாம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

குருதியில் தோய்ந்த ‘மை லாய்’ படுகொலை | உலகை உலுக்கிய வியட்னாம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

 அமெரிக்க எதிர்ப்பும்- சைகோன் வீழ்ச்சியும் !!

கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வரிகளில் வடிக்க முடியாத , உலகை உலுக்கிய கொடூர படுகொலைகளில் மிக மிலேச்சத்தனமாக கருதப்படும் ‘மை லாய்’ படுகொலை 55 வருடங்களுக்கு முன்னர் தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 நடந்தேறியது)

55 வருடங்களுக்கு முன்னர், உலகை உலுக்கிய கொடூர படுகொலைகளில் மிக மிலேச்சத்தனமாக கருதப்படும் ‘மை லாய்’ படுகொலையின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் இப்படுகொலைகளின் கோரம் வரிகளில் வடிக்க முடியாது. இக்கொடூரத்தில் மிக மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பெண்களும் குழந்தைகளுமாவர்.

பாலியல் வதை துன்புறுத்தல் 

கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்லது துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் (My Lai Massacre) மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான்.

அமெரிக்க எதிர்ப்பலை ஆரம்பம்

இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கு எதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் வியட்நாம் போரில் ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து உள்நாட்டிலும் பெரும் எதிர்ப்புகள் தோன்றின.

இத்தாக்குதலின் பின்னணியை ஆராய்ந்தால், டிசம்பர் 1967 இல் தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி தரையிறங்கியது. முதல் ஒரு மாதம் பெரிதாக எந்தத் தாக்குதலும் இடம்பெறவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த மாதங்களில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல்களில் 28 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 1968 இல் வியட் கொங் படைகள் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதலில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சோன் மை கிராமத்தில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கப் படைகளுக்கு தகவல் எட்டியது.

அமெரிக்கப் படைகள் இக்குக்கிராமங்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அக்கிராமத்தைப் பலமாகத் தாக்கி அனைவரையும் கொன்று விடும்படி கேணல் “ஒரான் ஹெண்டர்சன்” என்பவன் தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.
அநேகமாக பொது மக்கள் காலை 07:00 மணிக்கு முன்னர் சந்தைகளுக்கு சென்று விடுவரென்றும் மீதமுள்ளோர் வியட் கொங் தீவிரவாதிகளாகவோ அவர்களின் ஆதரவாளர்களாகவோ இருப்பர் என்றும் தாக்குதல் தொடங்க முன்னர் கப்டன் ஏர்னெஸ்ட் மெடினா என்பவன் தனது படைகளுக்குக் கூறினான்.

கோரமான வியட்நாம் படுகொலை

மார்ச் 16 இல் சார்லி கம்பனி என்ற அமெரிக்க முதலாம் பட்டாலியன் முதலில் ஹெலிகப்டர் தாக்குதலை ஆரம்பித்துத் தரையிறங்கியது. அங்கு எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்கப் படைகள் முதலில் சந்தேகத்துக்கிடமான பகுதிகளைத் தாக்கினர். முதலாவது பொதுமக்கள் தொகுதி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் சந்தேகத்திக்கிடமாக அசையும் எதனையும் சுட்டுக் கொல்லப் பணிக்கப்பட்டனர். தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் பல பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 70 முதல் 80 வரையான கிராம மக்கள் கிராமத்தின் நடுவில் வளைத்துப் பிடிக்கப்பட்டு இரண்டாம் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவனினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தொகுதி மக்களைச் சுட்டுக் கொல்ல மறுத்த அமெரிக்கப் படையினன் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து வில்லியம் கலி தன் கையால் அவர்களைச் சுட்டுக் கொன்றான்.

வியட்டு கொங் அதிரடி

இப்போரானது அதிகாரப்பூர்வமாக வியட்நாம் சனநாயகக் குடியரசான வட வியட்நாமுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் வியட்நாம் குடியரசான தென் வியட்நாமுக்கும் இடையில் இடம்பெற்றது. வியட்நாம், லாவோசு மற்றும் கம்போடியாவில் (Vietnam Conflict) 1965 இலிருந்து ஏப்ரல் 30, 1975ல் சைகானின் வீழ்ச்சி வரை நடைபெற்ற போரில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது, தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. எனவே இப்போர் பனிப்போர் காலத்திய பதிலிப்போர் என்று கருதப்படுகிறது.

வியட்டு கொங் (தேசிய விடுதலை முன்னணி என்றும் அறியப்படுகிறது), வடக்கினால் ஆதரிக்கப்பட்ட ஒரு தெற்கு வியட்நாமிய கம்யூனிச முன்னணி, அப்பகுதியில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொரில்லா போர் முறையில் சண்டையிட்டது.

அதேவேளையில், வியட்நாமின் மக்கள் படை, வடக்கு வியட்நாமிய இராணுவம் என்றும் அழைக்கப்படுகிறது, பெரும் படைகளுடன் வழக்கமான போர்முறையில் சண்டையிட்டது. போர் தொடர்ந்த போது வியட்டு கொங்கின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்தது.

ஏனெனில் வடக்கு வியட்நாமிய இராணுவத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளின் அதிகமாகின. அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமிய படைகள், தேடி அழிக்கும் செயல்பாடுகளுக்கு, வான் வலிமை மற்றும் தரைப்படைகள், ஆட்டிலரி, வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றைச் சார்ந்திருந்தன.

பிரான்சு காலனியாதிக்கம்

போரின் போக்கில், அமெரிக்கா வட வியட்நாமின் மீது மிகப் பெரிய அளவில் திட்டமிட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது. பிரான்சு காலனியாதிக்க1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் வியட்நாமில் ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டது. தற்போது கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் 1888 இல் பிரெஞ்சு இந்தோ சீனக் குடியேற்றமாக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்றத்தில் லாவோசும் இணைக்கப்பட்டது.

வட வியட்நாமிய படைகள் மற்றும் வியட்டு கொங், வியட்நாமை மீண்டும் ஒருங்கிணைக்கப் போரிட்டன. அவர்கள் இப்பிரச்சினையை ஒரு காலனியாதிக்க போராகவும் பிரஞ்சு மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்தோசீனா போரின் தொடர்ச்சியாகவும் பார்த்தனர்.

அமெரிக்கா அரசு இப்போரில் தங்களின் பங்கெடுப்பை தெற்கு வியட்நாமை கம்யூனிச அரசு கைப்பற்றுவதைத் தடுக்கும் ஒரு வழியாகப் பார்த்தது. மேலும் இது உலகம் முழுவதும் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒடுக்குதல் கொள்கையாகும்.

1950 களின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அப்போதைய பிரஞ்சு இந்தோசீனாவிற்கு வந்தனர். 1960களில் அமெரிக்க படைகளில் பங்கு, 1961 மற்றும் 1962இல் படைகளை மும்மடங்காக்கியதுடன் அதிகமாகியது.

பாரிஷ் அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா படைகளில் பங்கு 1964இல் டோகின் வளைகுடாவில் வடக்கு வியட்நாமியப் படையின் விரைவுப் படகுடன் அமெரிக்காவின் அழிப்பு போர்க்கப்பல் மோதிய நிழ்வுக்குப் பின் இன்னும் அதிகமாகியது. அதைத் தொடர்ந்து வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் இருப்பை அதிகப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் டோகின் வளைகுடாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1965இன் தொடக்கத்தில் அமெரிக்க தாக்குதல் படைகள் தொடர்ந்து வியட்நாமில் நிலைநிறுத்தப்பட்டன.

அவற்றின் தாக்குதல்கள் பன்னாட்டு எல்லைக்கோட்டையும் தாண்டியது. 1968 இல் அமெரிக்காவின் பங்கெடுப்பு உச்சத்தில் இருந்தபோது லாவோசு மற்றும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளிலும் கடுமையாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதேவேளையில் வியட்நாமிய கம்யூனிசப் படை எதிர் தாக்குதல்களைத் (Tet Offensive) தொடங்கியது. இந்த எதிர்தாக்குதல்கள் அதன் இலக்கான தெற்கு வியட்நாம் அரசை பதவியிலிருந்து விலக்குவதில் தோல்வியுற்றது, ஆனால் இது போரின் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தெற்கு வியட்நாமிற்கு பல ஆண்டுகள் இராணுவ உதவி செய்திருந்தாலும், இந்தப் போரில் அமெரிக்க அரசு வெற்றியை நோக்கி நகர்கிறது என்ற அரசின் வாதம் கற்பனையானது என்பதை இந்த எதிர்தாக்குதல் பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு உணர்த்தின.

வடக்கு வியட்நாமின் கம்யூனிசிப் படையினை எதிர்த்துப் போர் புரிவதை தெற்கு வியட்நாமிடமே ஒப்படைக்கும், “வியட்நாமியமாக்கல்” கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கப் படைகள் படிப்படியாக பின்வாங்கின.

1973இல் அனைத்து தரப்பினரும் கையெழுத்த பாரிசு அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னும் போர் தொடர்ந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகில் ஒரு எதிர்ப்புக் கலாச்சாரமாக வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் பெருமளவில் தோன்றியது.

அமெரிக்கா முழு பின்வாங்கல்

1973, ஆகஸ்ட் 15 அமெரிக்கப் படைகள் முழுமையாகப் பின்வாங்கின. 1975 வடக்கு வியட்நாம் படை சைகானைக் கைப்பற்றயதுடன் போர் முடிவுக்கு வந்தது. அதை அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது.

இப்போர் பெருமளவும மனித உயிர்களைப் பலிவாங்கியது. இப்போரின் போது இறந்த வியட்நாமிய வீரர்கள் மற்றும் மக்களின் எண்ணிக்கை 966,000 இலிருந்து 3.8 மில்லியன்கள் வரை இருக்கும்.  240,000 – 300,000 கம்போடியர்களும்,20000 – 62,000 லாவோசு மக்கள், 58,220 அமெரிக்க வீரர்களும் இப்பிரச்சினைகளில் கொல்லப்பட்டனர், மேலும் காணாமல் போன 1626 நபர்கள் இன்றும் கிடைக்கவில்லை.

போர்க்குற்றங்கள் வியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இப் போரின்போது கற்பழிப்பு, குடிமக்கள் படுகொலை, பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் போர்க் கைதிகள் கொலை போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக பொதுக் குற்றங்களான திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்றவையும் இடம்பெற்றன.

இப்போரில் காடுகளில் மறைந்து வந்து தாக்கிய வியட்காங் கொரில்லா போராளிகளின் மறைவிடங்களை அழிக்க, அமெரிக்க இராணுவம் வியட்நாம் காடுகளை அழிக்க ஏஜன்ட் ஆரஞ்ச் எனும் நச்சு அமிலத்தை வான் வழியாக காடுகளின் மீது பொய்து, வேதி தாக்குதல் நடத்தினர்.

இந்த நச்சு அமிலத்தால் வியட்நாம் காடுகள் அழிந்தததுடன், வியட்நாம் மக்கள் உடல் அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் இந்த நச்சு வேதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வியட்நாமியர், பிரான்சு நீதிமன்றத்தில் இன்னமும் வழக்கு தொடுத்து நட்ட ஈடு கோரி வருகின்றனர்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More