“கோட்டாபய ராஜபக்ச முழுப் பொருளாதாரத்தையும் நாசமாக்கினார். ரணில் விக்கிரமசிங்க முழு அரசியலையும் நாசமாக்குகின்றார். எனவே, இப்படிப்பட்ட ரணிலிடம் நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய்.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
‘உங்களின் கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சுப் பதவிகள் கேட்டதாக மஹிந்தானந்த அளுத்கமே எம்.பி. கூறுகின்றாரே?’ என்ற கேள்விக்கு டலஸ் அழகப்பெரும எம்.பி. பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்தானந்த அளுத்கமேவின் பேச்சை எப்படி நம்புவது? நாங்கள் 13 பேர் அரசில் இருந்து விலகி வந்தோம். அவர்களுள் 5 பேர் அமைச்சுப் பதவியைத் தூக்கி வீசிவிட்டு வந்தனர். அமைச்சுப் பதவி தேவை என்றால் நாங்கள் அரசுடன் இருந்திருப்போமே. எதற்காக நாம் வெளியே வர வேண்டும்?
ரணிலுடன் அமைச்சுப் பதவி கேட்டு இரவில் பேச வேண்டுமா? அப்படியே இருக்க முடிந்ததுதானே.
நாம் அமைச்சுப் பதவி கேட்டோம் என்பது பச்சைப் பொய். அரசியலில் இப்படிச் சேறு பூசுவது சாதாரண விடயம்” – என்றார்.