செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியே வெடுக்குநாறிமலை அட்டூழியம்”

“பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியே வெடுக்குநாறிமலை அட்டூழியம்”

1 minutes read

“தமிழர் தாயகத்தில் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ள பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியாகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கமும் ஏனைய விக்கிரகங்களும் இடித்தழிக்கப்பட்ட செயற்பாட்டை நோக்கவேண்டியுள்ளது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வெடுக்குநாறி ஆலய சிவலிங்கம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியானதும் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று, ஆலயப் பூசகர் மற்றும் நிர்வாகிகளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் தாயகத்தை கபளீகரம் செய்து பௌத்தமயமாக்கும் திட்டத்துக்காகவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரிலும் கைவைத்துள்ளார்கள். வெடுக்குநாறி மலையில் புத்தரைக் குடியேற்றுவதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

தங்களது இந்தத் திட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினருக்குப் பல தொந்தரவுகளை கடந்த காலத்தில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார் ஊடாகப் பிரயோகித்துள்ளனர்.

வடக்கில் ஏதாவது ஒரு மூலையில் அரச மரம் முளைத்தால் காணும். அங்கு ஓடோடி வந்து புத்தர் சிலையை வைப்பார்கள். பின்னர் ஏதாவது கதைகளைக் கூறி அங்கு விகாரையை அமைப்பார்கள். இதற்கு தொல்பொருள் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடந்தையாக இருப்பார்கள்.

இப்போது ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தியுள்ளார்கள். ஆலயத்தின் பூசகரை நேரில் சந்தித்தபோது, தான் 5 ஆவது தலைமுறை பூசகர் என்று கூறுகிறார். எவ்வளவு பழமை வாய்ந்த ஆலயத்தை இடித்தழித்து ஆக்கிரமிக்க முயல்கிறார்கள்?

பௌத்த மயமாக்கலை எதிர்க்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள். அதற்கு நான் முழுமையான ஆதரவு வழங்குவேன். அவர்களுடன் இணைந்து போராடத் தயாராக இருக்கின்றேன். பிடுங்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More