கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்கக் கப்பலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட வடக்கைச் சேர்ந்த 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி பதில் நீதிவான் பிரேமரத்ன திரானகம முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25 வயது முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த அமெரிக்க கப்பல் கடந்த மாதம் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அது மறுநாள் ஐரோப்பா நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
பின்னர், சுயஸ் கால்வாயில் நுழையும் போது, கப்பலில் பணியாளர்கள் முன்னர் அறிந்திராத நான்கு பேர் இருப்பதைக் கண்டு, தங்களது நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த இளைஞர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்த போது அவர்கள் இலங்கையர்கள் எனக் கப்பலின் பணிக்குழாமினர் உறுதிப்படுத்தி இலங்கைக்கு அருகில் பயணிக்கவிருந்த மற்றுமொரு கப்பலிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
பின்னர் நேற்றுமுன்தினம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின்படி, கடற்படை, பொலிஸ் மற்றும் துறைமுகங்கள் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று விசேட படகொன்றில் குறித்த கப்பலுக்குச் சென்று அவர்களைக் கைது செய்திருந்தனர்.
அதன்பின்னர் குறித்த 4 தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையிலேயே அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.