ஈரான் நாட்டின் ஆதரவுடன் லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இயக்கம் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு சட்டப்படி பயங்கரவாத இயக்கம் என வகைப்படுத்தியது.
இந்த இயக்கத்திற்கு நிதி ஆதரவு உள்ளிட்டவற்றை வழங்குபவர்களுக்கு எதிரான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் செயலில் ஈடுபட்டார் என கூறி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொலிஸார் இணைந்து செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய நபரான நசீம் சையது அகமது என்பவரை இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக மேற்கு லண்டன் நகரில் வைத்து இந்தியாவை சேர்ந்தவரான சுந்தர் நாகராஜன் என்ற காசி விஸ்வநாதன் நாகா என்ற நாகராஜன் சுந்தர் பூங்குளம் என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் தமிழகத்தில் மதுரையில் பிறந்தவரான அவரை, அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின்படி பொலிஸார் கைது செய்தனர். சர்வதேச கைது வாரண்டின் கீழ் கைது செய்யப்பட்ட சுந்தர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.