உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் இலங்கை வீர, வீராங்கனைகள் அனைவரும் பதக்கங்களை வென்றெடுப்பர் என எதிர்பாரக்கப்படுகிறது.
அப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியினர் உஸ்பெகிஸ்தான் நோக்கி இன்று திங்கட்கிழமை (24) காலை புறப்பட்டுச் சென்றனர்.
இந்த வருட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ள 7 பேரும் பதக்கங்களை வென்றெடுக்கக்கூடிய அடைவு மட்டத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்களில் குறிப்பாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலை வீராங்கனை நிர்மலி விக்ரமசிங்க தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய அடைவு மட்ட நேரத்தை (2:14 செக்.) கொண்டுள்ளார். குவைத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 4ஆசிய இளையோர் மெய்வல்லநர் சம்பிய்ஷிப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் (2:15.42) செக்.) வென்றிருந்தார்.
நிர்மலியின் சக பாடசாலை வீராங்கனையான துலஞ்சனா விக்ரமசிங்க பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதிக்கக்கூடியவர் என நம்பப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற 1500 மீற்றர் தேர்வுப் போட்டியில் துலஞ்சனாவும் நிர்மலியும் கடுமையாகப் போட்டியிட்டனர். அவர்களில் துலஞ்சனா நூலிழையில் வெற்றிபெற்றிருந்தார். அவர்கள் இருவரும் 4:47.89 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்திருந்தனர். மேலும் கடந்த வருடம் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிபெற்றவரைவிட சிறந்த நேரப் பெறுதியை துலஞ்சனா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே துலஞ்சனா தங்கப் பதக்கம் வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.
இந்த வருடம் இலங்கை இளையோர் மெய்வல்லுநர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி வீரர் லெசந்து அர்த்தவிது கடந்த வருடம் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் (1.97 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் இம்முறையும் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதே நிகழ்ச்சியில் திக்வெல்ல மத்திய கல்லூரியைச் சேர்ந்த நிலுபுல் பெஹெசர தேனுஜவும் பங்குபற்றுகிறார். அவரும் பதக்கம் வெல்லக்கூடிய அடைவு மட்டத்தைக் கொண்டுள்ளார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள கினிகத்தேனை, அம்பகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த அயோமல் அக்கலன்க, ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் பதக்கம் வெல்லக்கூடிய அதிசிறந்த அடைவு மட்டத்தைக் கொண்டுள்ளார்.
ஆசிய இளையோருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிசிறந்த 52.87 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியைக் கொண்டுள்ள இருவருடன் சம நிலையில் அக்கலன்க இருக்கிறார். எனவே, கடுமையாக முயற்சித்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் மலிந்தரட்ன சில்வா சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அதிசிறந்த உயரப் பெறுதி 4.60 மீற்றர் ஆகும்.
அத்துடன் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள காலி மஹிந்த கல்லூரி வீரர் ஜாத்யா கிருலவும் பதக்கம் வெல்லக்கூடியவராகக் கருதப்படுகிறார்.
எனவே, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேரும் தாய்நாட்டிற்கு புகழீட்டிக்கொடுப்பர் என நம்பப்படுகிறது.
அணி பயிற்றுநராக நுவன் மதுசன்க, வீராங்கனைகளுக்கு பொறுப்பாளராக சத்துரங்கி வீரக்கொடி, முகாமையாளராக ஸ்ரீ லங்கா அத்லெட்டிக்ஸ் உதவித் தலைவரும் சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகமுமான சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நுவன் மதுசன்கவும் சத்துரங்கி வீரக்கொடியும் கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்ந்தவர்களாவர்.
அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: லெசந்து அர்த்தவிது (அணித் தலைவர்), சந்தன ஏக்கநாயக்க (முகாமையாளர்), நுவன் புத்திக்க (பயிற்றுநர்), சத்துரங்கி வீரக்கொடி (பெண்களுக்கான பொறுப்பாளர்), நிற்பவர்கள்: துலஞ்சனா ப்ரதீப்பனி விக்ரமசிங்க, ஜாத்யா கிருல, நிலுபுல் பெஹெசர தேனுஜ, அயோமல் அக்கலன்க, துஷேன் மலிந்தரட்ன, கசுனி நிர்மலீ விக்ரமசிங்க
ஸ்ரீ லங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) பாலித்த பெர்னாண்டோவுடன் இலங்கை இளையோர் மெய்வல்லநர்களும் அதிகாரிகளும் எடுத்துக்கொண்ட படம்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்களுக்கான சீருடைகளை மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மாஸ் நிறுவனம் சார்பில் பொது முகாமையாளர் எச். காதர், வர்த்தக முகாமையாளர் கோதமி விமலானந்த ஆகியோரும் பயணப் பைகளை பி. ஜீ. மார்ட்டின் இண்டஸ்ட்றீஸ் நிறுவனம் சார்பில் அதன் பணிப்பாளர் ஷர்மிலா நிமலசிறியும் வழங்கினர்.