பிரிட்டன் பெண் கெய்லி பிரேசர், இலங்கை அதிகாரிகளின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா சட்டச் செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கையில் இருந்து தம்மை நாடு கடத்துவதற்கு, அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, சமூக ஊடகங்களில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆவணப்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கெய்லி பிரேசர் என்ற பெண்ணே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தன்னிச்சையான முறையில் தம்மை நாடு கடத்தும் முடிவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி, மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஆரம்பத்திலேயே நிராகரிக்கத் தீர்மானித்துள்ளது.
சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
முன்னதாக மருத்துவ வீசாவில் இலங்கை வந்திருந்த கெய்லி பிரேசர், விசா நிபந்தனைகளை மீறியதற்காக, 2022 ஓகஸ்ட் 15 திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவுத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அவர் அதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்திருந்தது.