ஓ! முள்ளிவாய்க்காலே!
உயிர்கொண்ட தேர்க்காலே!
‘மே’ பதினெட்டிற்
துயில் கொண்ட உயிர்க்காடே!
தீப் பந்தமாகிய தேசத்தின் தெய்வங்காள்!
பூப்பந்தில் தமிழர்க்கோர்
புதுவாழ்வு கிட்டும் வரை…
நீர் இட்ட ஓலம் நிறைவு பெறாதையோ!
அக்கினிக் குளம்பில் அலறித் துடித்து
அநாதரவாக அரற்றிக் கதறியே
குற்றுயிராகப் பதுங்கு குழிகளிற்
கும்பல் கும்பலாய்க் குடங்கி மடங்கி..
நிர்க்கதியாக நின்ற ஓரினத்தின்
நீதிக்குரலை நினைவிற் கொள்ளாது..
திக்குள தேசங்கள் அனைத்திலும் உள்ள
தெருக்கள் வீதிகள் நகர்கள் கிராமங்கள்
மக்களுலாவும் மன்றங்கள் முன்னே
மன்றாடித் தொழுத உலகத் தமிழரை
மனிதராய்க் கூட மதிக்க மறந்து…
அக்கறையின்றி அரசியல் நடத்திய
அகில உலகதன் அரசுகள் இன்று..
துக்கதினங்களில் நீலிக்கண் ணீருடன்
கொக்கரித்திடுகின்ற காட்சியைக் கண்டு
கோபத்தீயிலே நெஞ்சு கொதிக்குதே!
பக்கலில் நின்று படைகளை இயக்கியும்
பணபலங் கொடுத்துக் கருவிகள் இறக்கியும்
முக்கிய பயிற்சிகள் முழுமையாய் வழங்கியும்
முகத்திரையோடு முன்னின்று இயங்கியும்
தக்க தருணத்திற் தாக்கிட உதவியும்
தடைகள் விலக்கிடும் தந்திரம் பழக்கியும்
புத்தரின் பெயரிலே யுத்தம் நடத்திய
பௌத்த சிங்களப் பேரின வாதத்தின்
இரத்தவெறிகொண்ட தமிழின அழிப்பிற்கு
அத்தனைவழியிலும் ஆதரவளித்தவர்..
மத்தியில் இன்றுநாம் மனுநீதி கேட்கிறோம்!
மறைந்த மக்களின் நினைவின மீட்கிறோம்!
சத்திய நேர்மையே
அற்றவர் நடமாடும்
சாக்கடை அரசியல்
முற்றத்தில் நின்று
கட்டிய அரங்குகள்
கற்பித்த பாடங்கள்
கண்டும் கேட்டும்
கடந்தன காலங்கள்!
வித்தகர் எனநாம்
வியந்தவர் எம்முன்
விரித்த வலைகளில்
வீழ்ந்து இடர்ப்பட்டோம்!
உண்மையின் உறுதியும்
உயர்வான எண்ணமும்
கண்களில் ஒளியும்
கனவினிற் தெளிவும்
திண்மையும் திறனும்
தீர்க்கம் நிறைந்த
தரிசனப் பார்வையும்
தலைமைத் தகைமையைம்
கொண்ட தலைமுறை
தலையெடுத் திடும் வரை..
அந்நியர் வலையில்
அடிமைகளாகி..
அலையும் நிலையே
தமிழரின் விதியாம்!
சுயநலப்பேய்களின்
சுரண்டலும் சுழற்சியும்
பயமும் பீதியும்
பயனற்ற பயணமும்
கயமையும் எம்மைக்
கௌவாதிருக்க..
செயலும் சொல்லும்
சேர்ந்தியங் கிடவல்ல
சிந்தனையாளரும்
சிறந்த பண்பாளரும்
இணைந்திட யாவரும்
முயன்றிடல் வேண்டுமே!
புலவர் சிவநாதன்