வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அந்தவகையில், வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அரச நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவார். அவர் அரச அதிபர், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராவார். அவர் ஊவா மாகாண சபையில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன முன்னாள் அமைச்சராவார். அவர் மாகாண சபையிலும் பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் சகோதரரே லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன.