ஜப்பானின் ஹிரோஷிமாவில் ‘ஜி-7’ உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இதன்போது, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், “உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்” என மோடி உறுதி அளித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்தது, ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது.
இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், ‘ஜி-7’ நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த உச்சி மாநாட்டில், கலந்துகொள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.
அதன்படி ‘ஜி-7’ உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.