இங்கிலாந்து, நாட்டிங்ஹாம் நகர மையத்தில் வேன் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
மிட்லாண்ட்ஸ் நகரில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது வாகனம் மோதியதாகக் கிடைத்த தகவலையடுத்து, 31 வயதுடைய நபர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை 4 மணியளவில் நகர மையத்திற்குள் செல்லும் தெருவில் இரண்டு பேர் இறந்து கிடந்த நிலையில், இல்கெஸ்டன் சாலைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அத்துடன், மூன்று பேர் மீது வேன் ஒன்று மோதியதாக வந்த தகவலை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் மில்டன் தெருவுக்கு விரைந்தனர்.
அப்போது ஷெர்வுட் அருகே புறநகர் பகுதியில் உள்ள மக்தலா வீதியில் ஒருவர் இறந்து கிடந்தார். ஏனைய இருவர் காயமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட தலைமைக் காவலர் கேட் மெய்னெல் “மூன்று பேரின் உயிரைப் பறித்த கொடூரமான மற்றும் சோகமான சம்பவம் இது” என்றும், “இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று நாங்கள் நம்புகிறோம், எங்களிடம் ஒருவர் காவலில் இருக்கிறார் இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.