மேற்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பறியும் நபர்கள் விசாரணைக்கு தலைமை தாங்குவதுடன், ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் தகவலின்படி சம்பவம் தொடர்பாக வேறு யாரும் தற்போது தேடப்படவில்லை.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.12 மணியளவில் பெட்ஃபோன்ட், ஹவுன்ஸ்லோவில் உள்ள குடியிருப்புக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இதனபோது, அதிகாரிகள் மூடப்பட்டிருந்த வீட்டுக்குள் நுழைந்து, 30 வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண், 11 வயது சிறுமி மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரின் சடலங்களைக் மீட்டனர்.
சம்பவ இடத்தில் பேசிய தலைமைக் கண்காணிப்பாளர் சீன் வில்சன், “உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் உறவினரைக் கண்டுபிடித்து தெரிவிக்க அவசர விசாரணைகள் நடந்து வருகின்றதுடன், இப்போது பிரேத பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன” என்றார்.
அத்துடன், அவர் மேலும் கூறியதாவது “எங்கள் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, எங்களது ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் நாங்கள் தற்போது தேடவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.