“சட்டவிரோதமான போதைப் பாவனைக்கு எதிரான எண்ணக்கருவை மக்களிடத்தில் ஏற்படுத்த வல்ல சிறந்த ஊடகமாக – கருவியாக அரங்கக் கலையைப் பயன்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். அரங்க நடவடிக்கைகளின் ஊடாக மக்களை நெருங்கவும் அவர்களின் மனவழிப்பாட்டைத் தூண்டவும் போதைப் பாவனைக்கு எதிரான குரலாக அவர்களை ஒன்றிணைக்கவும் அரங்கச் செயற்பாட்டாளர்கள் ஆகிய எங்களால் முடிகின்றது என நம்புகின்றோம்.”
– இவ்வாறு சுயாதீன அரங்கச் செயலாளிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
“பொதுவெளியில் மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி தங்கள் உள்ளக் கிடைக்கைகளை உணர்ச்சித்தும்ப இவ்வரங்குகளில் வெளிப்படுத்துகின்றார்கள். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உறவுகள் கண்ணீர் மல்கி உருகுகின்றார்கள். பாதிக்கப்பட்ட இளையவர்கள் பலர் அதிலிருந்து மீள வழி தேடுகின்றனர். ஆகவே, எங்களால் சமூகத்தின் மனநிலையை மாற்றவும் சமூக உரையாடலாக இதனை நிகழ்த்தவும் முடிகின்றது.
இவ்வாறான பிரயத்தனமிக்க அரங்கச் செயற்பாட்டுப் பணிக்கு சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து எதிர்பார்த்து நிற்கின்றோம்.” – என்றனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வைத்தியர் சங்கம், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களினதும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் சுயாதீன அரங்கச் செயலாளிகள் எனும் குழுவாக்கத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அரங்கச் செயற்றிட்டம் ஒன்றை கடந்த ஆறு மாத காலமாக அரங்கச் செயற்பாட்டாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் ஊடாக ‘கழுமரம்’ என்கின்ற தெருவெளி அரங்க ஆற்றுகை, கிளிநொச்சி யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் பாடசாலைகளிலும் மக்கள் கூடுகின்ற கிராமத்து பொது வெளிகளிலும் கடந்த ஆறு மாத காலங்களாக 60 க்கும் மேற்பட்ட தடவைகள் அரங்காற்றுகை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றது.
கழுமரம் அரங்கச் செயற்பாட்டின் ஆற்றுகையினையின்போதும் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள், விவாதங்களில் செயல்முனைப்புடன் பங்குகொண்ட இளையவர்கள் இதனை ஒரு சமூக உரையாடலாக மாற்றத்தை நோக்கி மேற்கொண்டு வருகின்றனர் என்பது நம்பிக்கை தருகின்றது.
இதன் நீட்சியாக கழுமரத்தின் ஆற்றுகைச் செய்தி பரந்த பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் எனும் இலக்கோடு பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்ததும் திட்ட நோக்கோடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக காணொளி வடிவிலும் ஈ உத்தியோகபூர்வமாக சமூகப்பிரதிநதிகளின் பங்குபற்றுதலோடு வெளியிட்டு வைக்கப்பட்டது.
சம நேரத்தில் யூரியூப் இணையத்தளத்தில் உள் பார்வையிடக்கூடியவகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை நேரடியாக வெளிகளில் எதிர்கொண்ட ஆற்றுகை பல ஆரோக்கியமான அறிவுபூர்வமான கலந்துரையாடல்களையும் பின்னூட்டங்களையும் செயல்முனைப்புக்கான தூண்டல்களையும் பெற்றுக் கொண்டமை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயற்பாட்டின் நிச்சயம் தேவையும் கருதி குறைந்த பட்சம் காணொளி வடிவத்திலும் மக்களிடம் இதன் கருத்து செய்தி கொண்டு போய் சேர்ப்பிக்கப்பட வேண்டும் எனும் பெரும் எதிர்பார்ப்போடு இக்காணொளி வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
கழுமரம் ஆற்றுகை காணொளி வெளியீட்டு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இக்காணொளியை வெளியிட்டு வைத்தோடு இவ்வாற்றுகையில் தன்னார்வமாக இணைந்து செயலாற்றிய கலைஞர்களுக்கும் விருதினை வழங்கி மதிப்பளித்தார்.
தொடர்ந்து கழுமரம் ஆற்றுகை திரையிடப்பட்டு சபையோருடனான கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது.
இந்த அரங்கச் செயற்றிட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் கல்வித்துறை சார்ந்தோர், கலைஞர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.